Tuesday, December 21, 2010

டாரண்ட்...

டாரண்ட் லே தரவிறக்கறதைப்பத்தி பாத்தோம்.
இது ரொம்ப நல்ல வசதின்னாலும் பயன் படுத்தறது ஒரு மாதிரி இருக்கு. அது நல்லதா/ கெட்டதா, சரியா/ தப்பா ன்னு அவரவர்தான் முடிவு பண்ணிக்கணும்.
கூகுளாரை டாரன்ட் பத்தி கேட்டா பல தொடுப்புகள் கொடுப்பார். போய் பாத்தா ஆச்சரியமா இருக்கலாம். அங்கே லேட்டட்ஸ்ட் சினிமா படத்துலேந்து கணினி விளையாட்டு, இசை, விடியோ, டிவி நிகழ்ச்சிகள், மென்புத்தகம், படங்கள், காமிக்ஸ்  .....மென்பொருள் வரை எல்லாமே கிடைக்கும். காப்புரிமை மீறுவதா ஒரு புகார் எப்பவுமே இருந்துகிட்டு இருக்கு. பதிலுக்கு கேட்கிறாங்க: ஒரு புத்தகம் உங்ககிட்டே இருக்கு. கொஞ்சம் படிச்சுட்டு கொடுக்கிறேன் ன்னு யாரும் கேட்டா கொடுக்கிறோமா இல்லையா? ஒரு சிடி யை பாக்க கேட்க கொடுக்கிறோமா இல்லையா? அது போலத்தான் ஒரு கோப்பை பரிமாறிக்கறோம். இது தனிப்பட்ட நபர் - நபர் பரிவர்த்தனை. இதை கேள்வி கேட்க முடியாது. இது சட்ட விரோதம்  இல்லை என்கிறாங்க. பரிமாற்றம் சட்ட விரோதம் இல்லை. ஆனா உடைக்கப்பட்ட மென்பொருட்கள் நிறுவறது சட்ட விரோதம் இல்லையா?
சரி சரி தேடி இறக்கின கோப்பை நிறுவலாமான்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க!
இருந்தாலும் இதில சில ஏமாற்றங்கள் இருக்கும்!
லேட்டஸ்ட் படம்ன்னு சொல்லி பழைய படத்தை ஏத்திவிடுவாங்க! கூடவே இலவச இணைப்பா ஒரு வைரஸும் வரும்!
தரவிறக்கினதை எப்பவுமே வைரஸுக்கு சோதிக்காம திறக்காதீங்க! இது பொதுவான விதி! கோப்பை வலது சொடுக்கினா வைரஸ் சோதனைக்கு தேர்வு வரும். சோதிச்சு பார்த்தே திறக்கவும். சோதிச்சு பார்த்தே திறக்கவும். என்ன தப்பா ரெண்டு தரம் எழுதிட்டேன்ன்னு நினைக்கிறீங்களா? :-) இதை எவ்வளோ தரம் சொன்னாலும் போதாது! அதான்!
பின்ன இந்த போலிகளை எப்படி கண்டு பிடிக்கிறது? சாதாரணமா இந்த டாரண்ட் தர எல்லா தளங்களிலுமே தரவிறக்கினவங்க விமரிசனம் செய்ய ஒரு வசதி இருக்கும். அங்கே போய் தரவிறக்கினவங்க என்ன சொல்லறாங்கன்னு பார்க்கணும். நாலஞ்சு பேராவது இது நல்லா இருக்குன்னு சொல்லனும். தரவு ஏத்தினவர் ஒத்தர் நல்ல இருக்குன்னு சொல்லிடுவார். அவரே இன்னொரு ஐடி லேந்து திருப்பியும் நல்லா இருக்குன்னு சொல்லுவாரா இருக்கும்! அதனாலதான் 4-5 பேராவதுன்னு சொன்னேன்!
சில சமயம் தரவிறக்கின பிறகு இதை திறக்க இவ்வளோ டாலர் கொடுத்தா விசை தரேன்ன்னு சொல்லும். சில சமயம் படத்தை பார்க்க இந்த மென்பொருள்தான் தரவிறக்கி பார்க்கணும்ன்னு சொல்லும். இதெல்லாமும் நடக்கும்.
இந்த மாதிரி கோப்புகளெல்லாம் பெரிசு என்கிறதால உங்களுக்கு இலவச நெட் நேரம் கொடுத்து இருந்தா அந்த நேரத்திலே தரவிறக்குங்க. இது கொடுக்கல் வாங்கல் சமாசாரம் என்கிறதால 100 எம்பி தரவிறக்க 200 எம்பி போல நெட் கோட்டா காலி ஆகிடும்ன்னு நினைவு வெச்சுக்கோங்க!
எந்த மென்பொருளை தரவிறக்கணும்னாலும் அந்த மென்பொருளோட மூல தளத்திலேந்தோ (அதாவது அடோபி ப்ளாஷ் அடோபி தளத்திலேந்து மாதிரி) சிநெட் டூகவ்ஸ் மாதிரி தரவிறக்க தளங்களிலேந்தோ தரவிறக்குங்க. அவங்க சோதித்துத்தான் தரவிறக்க தருவாங்க.

Monday, December 20, 2010

வெள்ளம்!

தரவிறக்கத்துல இன்னொரு வகையை பாத்துட்டு மேலே போகலாம்.
ஒரு பெரிய கோப்பு இருக்குன்னு வெச்சுக்குங்க. ம்ம்ம்ம்ம் ஆன்மீகம் பார் டம்மீஸ் புத்தகமா.... ம்ம்ம்ம் ... அது ஒண்ணும் பெரிய கோப்பா இராது...சரி சரி உபுண்டு வட்டு பிம்பம் ன்னு வெச்சுக்கலாம். அது எப்பவும் ஒரு குறுந்தட்டு - சிடி  - அளவு - 700 எம்பி இருக்கும். உலகத்திலே 12 மில்லியன் - 1.2 கோடி உபுண்டு பயனர்கள் இருக்காங்களாம். (செக்யூரிடி அப்டேட் எவ்வளோ பேர் தரவு இறக்கறாங்கன்னு பாத்து கண்டு பிடிக்கறாங்களாம்). இவ்வளோ பெரிய கோப்பை ஒரு சேவையகத்திலேந்து (server) இறக்கலாம். ஆனா கஷ்டமா இருக்குமில்லையா? அதனால் நாட்டுக்கு நாடு சேவையகம் வெச்சு இருக்காங்க. இருந்தாலும் 1.2 கோடி ரொம்ப பெரிய நம்பர்.
பின்னே இவ்வளோ பேருக்கு எப்படி வசதி செய்யறது? ஒவ்வொரு ஏப்ரல் மாசமும் அக்டோபர் மாசமும் புதுசா ரிலீஸ் செய்வாங்க. அப்ப தரவிறக்க முழி பிதுங்கிடும் இல்லையா?
இந்த மாதிரி பிரச்சினைக்கு ஒரு வழி கண்டு பிடிச்சு இருக்காங்க. அதன் மூலம் எவ்வளோ பேர் வேணுமானா குறைந்த நேரத்திலே ஒரே சமயம் தரவிறக்கிக்க முடியும். அதுக்கு டாரண்ட் ன்னு பேர். அதை டாரண்ட் ன்னுதான் சொல்லணும்; வெள்ளம்ன்னு சொல்லக்கூடாது!
அது எப்படி வேலை செய்யுதுன்னு பாக்கலாமா?
ம்ம்ம்ம்ம் ஒரு 100 எம்பி கோப்பு இருக்குன்னு வைச்சுக்கலாம். அதை 256KiB துண்டுகளா வெட்டறேன்.  ஒரு எம்பி க்கு (MB.  MP MLA இல்லை!) 4 துண்டு ஆச்சு. அப்ப 100 எம்பி 400 துண்டாச்சு. இப்ப என்ன செய்யறேன், முதல்ல தரவிறக்க வர ஆசாமிக்கு முதல் துண்டை கொடுக்கறேன். அதுக்குள்ள இரண்டாம் ஆசாமி வரார். அவருக்கு முதல் துண்டை தர மாட்டேன். இரண்டாம் துண்டை தருவேன்! மூணாவது ஆசாமிக்கு மூணாவது துண்டு. முதல் ஆசாமி எனக்கு மத்த துண்டுகள் வேணும்ன்னு கேட்டா, ரெண்டாம் துண்டு ரெண்டாம் ஆசாமிகிட்டே, மூணாவது துண்டு மூணாவது ஆசாமிகிட்டே வாங்கிக்குங்கன்னு சொல்லுவேன். அவரும் வாங்கிப்பார். பதிலுக்கு அவங்ககிட்ட இல்லாத முதல் துண்டை தருவார். ரெண்டாம் ஆசாமி ரெண்டாம் துண்டை மத்தவங்களுக்கு கொடுத்துட்டு முதல் மூணாவது துண்டை வாங்கிப்பார். இதே போல மூணாவது ஆசாமி. இப்ப மூணே தரம் நான் துண்டு கொடுத்ததுல மூணு பேருக்கும் மூணும் கிடைச்சாச்சு.
இப்படி சேவையகத்துக்கு வேண்டுதல் வர வர அடுத்த அடுத்த துண்டுதான் கொடுக்கப்படும். 400 பேருக்கு 400 துண்டு கொடுத்த பிறகே திருப்பி முதல் துண்டு கொடுக்கப்படும். துண்டுகளை வாங்கினவங்க அவங்களுக்குள்ள பரிமாற்றம் பண்ணிப்பாங்க.  இதே போல எத்தனை துண்டுகள் வேணுமானலும் பரிவர்தனை செஞ்சுக்கலாம்! டாரண்டுக்கான மென்பொருள் இந்த துண்டுகளை எல்லாம் ஒண்ணா சேத்து முழு கோப்பா ஆக்கிடும்!
அது சரி என்ன துண்டு யாருகிட்டே இருக்குன்னு எப்படி தெரியும்?
அதுக்குத்தான் சேவையக வேலை வேணும். ட்ராக்கர் ன்னு இதுக்கு பேரு. நம்மகிட்ட இருக்கிற துண்டுகள் என்ன என்ன மத்தவங்ககிட்ட இருக்கறது என்ன என்னன்னு இது கணக்கு வெச்சுகிட்டே இருக்கும். இன்னார் இன்னார்கிட்ட வாங்கிக்குங்க ன்னு தகவல் கொடுத்துகிட்டே இருக்கும். கோப்போட துண்டுகள் பரவலா இருக்கிறதால் சேவையக பளு இல்லாம ஒத்தர் கணினியிலேந்து ஒத்தர் கணினிக்கு நேரடியா கோப்பு துண்டுகளை பரிமாறிக்கலாம். இதானால் நம்மோட இணைப்பை பொருத்து வெகு சீக்கிரம் கோப்பு மொத்தமும் கிடைச்சுடும்!
மேலே தகவல் அடுத்த பதிவுல.

Wednesday, December 15, 2010

தரவிறக்கம்:

ரைட். இப்ப அடுத்த விஷயம் பார்ப்போம். ஒரு வலைத்தளத்துக்கு போறோம். அங்க நிறைய தொடுப்பு கொடுத்து இந்த மென்பொருளை இலவசமா தரவிறக்கிக்கலாம்ன்னு போட்டு இருக்கு. அட! நல்லதாச்சே! தரவிறக்கலாம்ன்னு பாக்கறீங்க. அதை எப்படி செய்யறது?
தரவிறக்கும் முன்னாடி சில விஷயங்களை கவனிக்கனும். free download ன்னு சொல்லறது பல இடங்களிலே இருக்கும். ஆனா அது உண்மையா இலவசம்தானான்னு பார்கணும். சில இடங்களில மட்டுமே இது free to try ன்னு தெளிவா இருக்கும். அதாவது ஒரு சில -10, 15 - நாட்களுக்கு இலவசமா பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்த அதை காசு கொடுத்து வாங்கணும். இப்படி தர மென்பொருட்களிலே சில சமயம் சில வசதிகளை முடக்கி வைக்கிறதும் உண்டு.
சிலதை தரவிறக்கி நிறுவறப்பத்தான் வண்டவாளம் வெளியாகும். விலாவரியா சமாசாரம் எல்லாம் கேட்டு அப்புறமா ரைட் நிறுவியாச்சு. ஆனா வேலை செய்யணும்ன்னா இங்க போய் ரெஜிஸ்டர் பண்ணு; இவ்வளோ டாலர்தான் ன்னு சொல்லும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு கர்ஜனை பண்ணி பிரயோசனமில்லை. முன்னேயே கவனமா நிச்சயமா இலவசமான்னு பாத்து இருக்கணும். அதை வேணுமின்னே சின்ன எழுத்துக்களில ஒரு மூலைல போட்டு வெச்சு இருப்பாங்க!
சிலது தொணப்பல் கேஸ்! சின்ன கால்குலேட்டர், டைமர், கடிகாரம் மாதிரியான மென்பொருட்கள் இபப்டி இருக்கலாம். அதை இவ்வளோ நாள் இலவசமா பயன்படுத்தலாம். அப்புறம் காசு கொடுத்து ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் விசை வாங்கணும். இல்லைன்னாலும் தொடர்ந்து வேலை செய்யும். ஆனா படுத்தும். அதாவது வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்னே ரெஜிஸ்டர் பண்ணுங்களேன் அப்படின்னு செய்தியை காட்டும். இல்லை ரெண்டு கணக்கு போட்டதும் டாட்டா சொல்லிட்டு மூடிக்கும். திருப்பி அதை துவக்கணும். இல்லை தன்னோட இணைய தளத்துக்கு அழைச்சுட்டு போய் காசு கொடுக்க இந்த வசதியை பயன்படுத்துங்கன்னு சொல்லும். காசு கொடுக்கறோமோ இல்லையோ அந்த வலைப்பக்கத்தில இருக்கிற விளம்பரம் மூலமா சம்பாதிச்சுடுவாங்க! இப்படி செயல்படற மென்பொருட்களை Nagware அப்படிம்பாங்க. இன்னும் சிலது adware. அதாவது விளம்பரம் மூலமா சம்பாதிக்கறது. ஒரு தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தறதா வெச்சுக்கலாம். அதை பயன்படுத்தி தரவிறக்கறப்ப முதல்ல ஒரு விளம்பரத்தை தரவிறக்கும். அது அந்த மென்பொருள் சாளரத்தில காட்டப்படும். அஞ்சு நிமிஷத்தில வேலை முடியலைன்னா இன்னொரு விளம்பரம் தரவிறக்கப்பட்டு காட்டப்படும். இப்படியே அது திறந்து இருக்கிற வரை காட்டிக்கிட்டே இருக்கும்.
ரொம்ப பாப்புலரா இருக்கிற ஜிமெய்ல் ஹாட்மெய்ல் யாஹூ மெய்ல் எல்லாமும் ஒரு விதத்தில ஆட்வேர்தான். அவற்றோட வலைப்பக்கத்தில வலது பக்கம் மேலே கீழேன்னு விளம்பரங்கள் வரதை பாருங்க!
யானை இலவசம்; ஆனா அங்குசமும் கூட வாங்கணும். அது இத்தனை ஆயிரம் ரூபான்னு சொல்கிற மாதிரி, இசை இலவசம்; ஆனா என் மென்பொருள் மட்டுமே அதை இசைக்க முடியும். அதை இவ்வளோ காசு கொடுத்து வாங்கு ன்னு சொல்கிற மாதிரியான தளங்களும் உண்டு.
இன்னும் சில இடங்களிலே ஒரு சாதா சோதா மென்பொருளுக்கு ரெஜிஸ்டர் பண்ணிக்க; அதுவும் இலவசம்தான்னு சொல்லும். சரின்னு ரெஜிஸ்டர் பண்ண போனா பேரு, ஊரு, முகவரி, அஞ்சல் முகவரின்னு சப்ஜாடா நிறைய விசாரிக்கும். என்னன்னா இந்த தகவலை காசு கொடுத்து வாங்க ஆள் இருக்கு. இந்த மாதிரி ரெஜிஸ்டர் பண்ணினா கொடுத்த முகவரிக்கு ஸ்பேம் அஞ்சலா வர ஆரம்பிக்கும். என்ன செய்யறது? கூடிய வரை இந்த மாதிரி எங்கேயும் ரெஜிஸ்டர் செய்யாம திரும்பிடலாம். நிச்சயமா வேற ஆப்ஷன் - தேர்வு மத்த இடங்களிலே இருக்கும். வெகு சில நேரங்களிலேதான் வேற தேர்வு இல்லாம இருக்கும். நான் இதுக்குன்னு ஒரு மின் அஞ்சல் முகவரி வெச்சு இருக்கேன்! அங்கே போய் அஞ்சல் பாக்கிறதே கிடையாது! :-)) ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் போய் எல்லாத்தையும் டெலீட் செய்துடுவேன்!

உலகத்திலே எதுவுமே இலவசம் இல்லைன்னு சொல்கிறதுண்டு. ஆனால் உண்மையிலே நிறையவே இலவசமாக வலையிலே கிடைப்பது உண்டு. லீனக்ஸ் மாதிரி இயங்கு தளமே இலவசமா கிடைக்கிறப்ப மென்பொருட்கள் என்ன? நிறைய மென்பொருள் தொழில் வல்லுனர்கள் அவங்களோட ஓய்வு நேரத்திலே நல்ல மென்பொருட்கள் தயார் பண்ணி வெளியிடறதுண்டு. சிலர் தனக்கு வேண்டியிருக்குன்னு தயார் பண்ணதை யாம் பெற்ற இன்பம் ... ரீதியிலே வெளியிடறதுண்டு.
சரி சரி தரவிறக்கற சமாசாரம் சொல்லுன்னா...
ஒண்ணும் அதிகம் செய்ய வேண்டாம். அவங்க டவுன்லோட் ன்னு கொடுத்து இருக்கிற பொத்தானையோ வார்த்தையையோ சொடுக்கினா பயர்பாக்ஸ்ல இருக்கிற தரவிறக்க மென்பொருள் சேமிக்கவா, இயக்கவா ன்னு துரியோதனன் பாணியிலே கேட்டுட்டு இறக்கி சேமிச்சு வெச்சுடும். இது இப்ப நிறையவே முன்னேறி இருக்கு. முன்னல்லாம் தரவிறக்கம் மெதுவா இருந்தா, சரி அப்புறம் பாத்துக்கலாம்ன்னு மூட முடியாது. உலாவியை மூடிட்டா தரவிறக்கி கொண்டு இருந்ததும் காணாம போயிடும். இப்ப அதை நிறுத்தி பின்னால மீண்டும் ஆரம்பிச்சுக்கலாம். பெரிய கோப்புக்களா தரவிறக்க dTa மாதிரி தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தறது நல்லது. அது கோப்பை பல பாகங்களா பிரிச்சு ஒரே நேரத்திலே பல துண்டுகளா தரவிறக்கி அப்புறம் ஒண்ணா தைச்சு கொடுத்துடும்.
இன்னும் அட்வான்ஸ்டா வேணும்ன்னா free download manager போல தரவிறக்கி பயன்படுத்துங்க. நிறுவல் பத்தி அப்புறம் சொல்லறேன்.

Tuesday, December 14, 2010

ஆட்ஆன்....

நல்ல கேள்வி!
பயர்பாக்ஸோட அருமை அதை ரொம்ப சின்னதா நிறுவிக்கலாம். நமக்கு வேண்டிய வசதிகளை கூடுதலா நிறுவிக்கலாம். இதை ஆரம்பத்திலேயே பாத்தோம் இல்லையா?
முன்னேயே ஒரு தொடுப்பும் கொடுத்து இருந்தேன். வகை வகையா என்னென்ன இங்கே இருக்குன்னு.
நமக்கு எரிச்சல் தரக்கூடிய ஒரு விஷயம் விளம்பரங்கள். ஒரு பக்கம் அவை இருக்கிறதாலதான் நமக்கு இலவசமா பல தகவல்கள் கிடைக்குதுன்னாலும் சமயத்திலே நிறைய விளம்பரங்கள் சேர்ந்து முதல்ல லோட் ஆகி நமக்கு வேண்டிய தகவல் வரதுல தாமதம் ஏற்படுத்தும். சில தளங்களில ப்ளாஷ் லோட் ஆகி ஆகி ஆகி... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பாடான்னு ஆகிடும். இதை எல்லாம் தடுக்க தேவையான நீட்சி ஆட்ப்ளாக். adblock. Flash block. ப்ளாஷ் க்கு ஒரு ப்ளக் இன் தேவைப்படும். அதை நிறுவாம இருந்துட்டாலும் பிரச்சினையை பெரும்பாலும் தவிர்க்கலாம். ஆனா இப்ப சில தளங்கள் முதல் பக்கத்தையே ப்ளாஷ்ல பண்ணறாங்க. அதனால் அப்படிப்பட்ட தளங்களை பார்க்கணும்ன்னா ப்ளக்இன் தேவைப்படும்.
உலாவில ஓட்டையை பயன்படுத்தி நம்ம கணினியை கெடுக்க வந்த பல விஷயங்கள் ஸ்கிரிப்ட்ஸ் என்கிற குறுநிரல்களால வருது. அதனால நமக்குத் தெரியாம ஸ்கிரிப்ட்ஸ் வேலை செய்யக்கூடாதுன்ன நிறுவ வேண்டியது நோஸ்கிரிப்ட். அனுமதிக்க வேண்டிய இடங்களில இவற்றை அனுமதிச்சுக்கலாம். உதாரணமா ஏதாவது தளத்துக்குள்ளே சில தகவல்களை தேடப்போனா அது ஒரு ஸ்கிரிப்ட் மூலமாதான் நடக்கும். அப்படி இருக்கிறப்ப நாம அதை தடுத்து வெச்சு இருந்தா நமக்கு தகவல் கிடைக்காது. அடிக்கடி பயன்படுத்தற தளமா இருந்தா always allow ன்னு சொல்லிடலாம். இல்லைன்னா allow scripts temporarily ன்னு சொல்லிடலாம்.
ஒரு இசைப்பிரியர் ஒரு தளத்துக்கு போறார். அங்கே பல பாடல்களை தரவிறக்க வசதி செஞ்சு இருக்கு. ஆஹா மஹாராஜபுரமா தரவிறக்குவோம்ன்னு அந்த தொடுப்பை சொடுக்கறார். பாட்டு தரவிறங்குது. அடுத்து பாத்தா பால முரளி க்ருஷ்ணாவோட ஒரு பாடல். அட! ன்னு அதையும் தரவிறக்கறார். அடுத்து பாத்தா... இப்படியே அந்த தளம் முழுக்க அவர் தரவிறக்க விரும்பற பாடல்களா இருக்கு. என்ன செய்யறது? டட்டடாய்ங்க்! டிடிஏ. dTa. Down them all. இந்த நீட்சியை நிறுவினா அந்த வலைப்பக்கதிலே எங்கே வேணுமானாலும் வலது சொடுக்கு சொடுக்கினா அந்த பக்கத்திலே இருக்கிற எல்லா தொடுப்புக்களும் தெரியும். தேவையானதை எல்லாம் டிக் அடிச்சு குறி போட்டுட்டு இறக்குப்பான்னு சொல்லிட்டு டிபன் சாப்பிட போகலாம். அது சமத்தா ரெண்டு ரெண்டு பைல் லா தரவிறக்கி வெச்சுடும். ரெண்டுரெண்டுன்னு இல்லை. எவ்வளொ ஒரே நேரத்தில இறக்கலாம்ன்னு அமைச்சுக்கலாம்.

இப்படி பல ஆட் ஆன்கள் இருக்கு. ஒவ்வொண்ணையும் தேடி தேடி அமைக்க அயர்ச்சியா இருந்தா இதை நிறுவுங்க! இது உங்களுக்கு வகை பிரிச்சு எது வேணும்ன்னு கேட்டு எல்லாத்தையும் தானே நிறுவிடும்!

Monday, December 13, 2010

புக்மார்க்

ரைட்! நமக்கு வேண்டிய சமாசாரம் எல்லாம் தேடு பொறியிலே தட்டச்சி போய் பாத்தாச்சு. சிலதெல்லாம் ரொம்ப பிடிச்சு இருக்கு. அதுவும் இந்த டெக்பார்எல்டர்ஸ் இருக்கே.....அடடாடாஆ! பிரமாதம். அதை தினசரி படிக்கணும் போல இருக்கே! தினசரி தொண்டுகிழங்களுக்கு தட்டச்சி தேடி.... வேண்டாம். அவ்வளொ சிரமப்பட வேண்டாம். இதுக்கு புக்மார்க் ன்னு ஒரு வசதி இருக்கு.
ஒரு புத்தகத்தை படிச்சிட்டு இருக்கிறோம். திடீர்ன்னு "தங்கமணி என்ன இவ்வளோ நேரமாச்சு? இன்னும் இட்லி மாவு அரைக்கலையா" ன்னு அதட்டறாங்க! தோ வரேன் ன்னு சொல்லிகிட்டே அந்த வேலையை கவனிக்க போறோம். புத்தகத்தை அப்படியேவா மூடிட்டு போவோம்? அங்கே பக்கத்தில இருக்கிற காகிதம்- பஸ் டிக்கட், காலண்டர் தாள் ... ஏதோ ஒண்ணை பக்கத்துக்கு அடையாளமா வெச்சுட்டு போவோம். த.ம வுக்கு வேன்டிய வேலை எல்லாம் செய்து கொடுத்துட்டு வேர்க்க விருவிருக்க திருப்பி வந்தா டக்குன்னு பக்கத்தை கண்டு பிடிச்சு படிக்க சௌகரியம்.
அதே போல ஒரு வலைதளத்தை குறிச்சு வெச்சுகிட்டா சுலபமா திருப்பி அதை பார்க்கலாம்.
இதுக்கு செய்ய வேண்டியது எல்லாம் ctrl+D அடிக்க வேண்டியதுதான். இது என்னன்னுதான் தெரியுமே! ctrl விசை கூடவே D விசையும் அழுத்த வேண்டியதுதான். படக்குன்னு ஒரு சின்ன சாளரம் திறந்து இதை குறிச்சு வெச்சுக்கும்.

கீழே ஒரு அம்புக்குறி தெரியுதா? இன்னும் பலது கீழே இருக்கு...
From bookmarks


இப்படி குறிச்சு குறிச்சு வெச்சு... எவ்வளோதான் குறிக்கறது? ஆன்மீகம் பார் டம்மீஸ், சித்திரம் பேசுதடி,கதைக்தையாம் காரணாமாம், spirituality for youth, யப்பாடா! எவ்வ்வளோதான் குறிச்சு வைக்கிறது?
நிறைய குறிச்சு வெச்சுட்டா அப்புறமா அதை கொஞ்சம் ஒழுங்கு படுத்தணும். ctrl+shift+O அடிக்கலாம். {ஓ, சைபர் இல்லை}
இடது பக்கம் அடைவுகள் தெரியும். வலது பக்கம் இருக்கிற புக்மார்க் எல்லாத்தையும் வகைப்படுத்தி இடது பக்க அடைவுகளில இழுத்து விடலாம். தேவையானால் புதுசா பேர் போட்டு புது அடைவு தயார் செஞ்சுக்கலாம். வெப், நம்ம பேவரிட் ப்லாக்குகள், இசை சம்பந்தமான தளங்கள் ன்னு இது போல அடைவுகளை தயார் பண்ணி வெச்சுகிட்டா வசதியா இருக்கும். ஒரு பத்து புக்மார்க்குக்கு மேலே இருந்தா பிரச்சினை வர வாய்ப்பு இருக்கு.

From bookmarks
பயர்பாக்ஸ் புதிய பதிப்பிலே சில வசதிகள் தராங்க. புதுசா ஒரு கீத்து..... அதாங்க ஒரு tab திறந்தா அங்கே நாம அடிக்கடி போற இடங்கள், சமீபத்திலே போன் இடங்கள் ன்னு குறும்படமா காட்டப்படும். சொடுக்குவதன் மூலமா அதிலேந்து சுலபமா தளத்துக்கு போய்க்கலாம்.

எல்லாத்துக்கும் ஆட்ஆன் இருந்தா இதுக்கும் இராதா? எக்ஸ்மார்க்ஸ் ன்னு ஒரு ஆட்ஆன். ஒரு சில பிசி, ஒரு லாப்டாப் ன்னு செயலா இருக்கிறவங்க இதை எல்லா கணினிகளிலேயும் நிறுவினா எல்லா கணினியிலேயும் ஒரே புக்மார்க் பட்டியல் இருக்கும். மாற்றங்கள் செய்தா உலாவியை மூடு முன் அது அதோட தளத்திலே இருக்கிற பட்டியலோட ஒருங்கிணைக்கும் (ஸிங்க் செய்யும்). வலை தொடர்பு கொண்டதும் இதை மற்ற கணினிகளிலேயும் ஸிங்க் செய்யும்.
ம்ம்ம்ம் நல்லா இருக்கே! வேற என்ன என்ன வசதி இது போல இருக்கு?
நல்ல கேள்வி!

Thursday, December 9, 2010

தேடல்...

என்ன உங்க பேரை டைப் அடிச்சு கூகுளார் என்ன சொன்னார்ன்னு பாத்தாச்சா?
சரி! இதை ஏன் பண்ண சொன்னேன்னா வலையுடைய சக்தி எவ்வளோன்னு தெரிஞ்சுக்கத்தான். அனுமான் மாதிரி நாம! நமக்கே நம்மை பத்தி தெரியாது! திவா ன்னு தேடிப்பாத்தா .... அனியாய அக்கிரமத்துக்கு.... ஹிஹிஹிஹி!

to see picture clearly middle click to open in a tab that you can close later.
From browser

இப்ப நமக்கு ஒரு விஷ்யம் புரிஞ்சிருக்கும். வலையிலே சுலபமா விஷயங்களை கண்டு பிடிக்க செய்ய வேண்டியது தேடு பொறி உதவியை தேடறதுதான். ரொம்பவும் கூட தேட வேண்டாம். முன்னிருப்பாவே அதோட வசதி உலாவியிலே இருக்கு!
கூகுளார் தான் ரொம்ப பிரபலம். எவ்வளோ வார்த்தைகள் கூட கொடுக்கிறோமோ அவ்வளவு சுலபமா நமக்கு வேண்டிய தகவல் கிடைக்கும். ஆமா இன்டர்நெட் ஒரு தகவல் சுரங்கம்.

to see picture clearly middle click to open in a tab that you can close later.
From browser

345 USD in INR ன்னு தேடல் பெட்டியிலே தட்டச்சினா உடனே அது 345 U.S. dollars = 15 545.4423 Indian rupees ன்னு 0.22 வினாடிகளிலே லே தேடி சொல்லிடும். இந்த தேடலுக்கு ஆகிற நேரத்துக்கு நம்மோட இணைய இணைப்புதான் லிமிடிங் சமாசாரம்.
காலேஜ் படிக்கிறப்ப ஒரு சினிமா கிளப் ஆரம்பிச்சு தூதரக டாக்குமென்டரியிலேந்து பழைய ஹிந்தி படங்கள் ஈறா வாரம் ஒரு படம் போட்டு கொண்டிருந்தாங்க. 16 எம் எம் வெள்ளித்திரை! மாசத்திலே ஒரு தமிழ் படம், ஒரு ஹிந்தி படம் ரெண்டு ஆங்கிலப்படம் ன்னு கணக்கு. தமிழ் ஹிந்தி படங்கள் பிரச்சினை இல்லை. தமிழ் படம் புரிஞ்சுடும். ஹிந்தி எப்படியும் புரியாது!
ஆங்கிலப்படம்தான் பிரச்சினையே! என்ன பிரச்சினைன்னா கதை புரிஞ்சா மாதிரியும் இருக்கும். புரியாத மாதிரியும் இருக்கும். அதனால படம் பாத்துட்டு ஹாஸ்டலுக்கு திரும்பும் போது ஆளுக்கு அவங்க அவங்க வெர்சன் கதையை சொல்லிகிட்டு வருவோம்!
இப்ப நம்மகிட்டே உலாவி இருக்கே! பிரச்சினையே இல்லை. அபோகலிப்டோ கதை என்னன்னு தெரியணுமா? தேடு பொறி பெட்டியிலே தட்ட்ச்சுங்க. தேடு பொறியை விக்கிபீடியான்னு அமைங்க. சினிமா கதையை ஜாலியா படிக்கலாம்.

to see picture clearly middle click to open in a tab that you can close later.
From browser

ம்ம்ம்ம்ம்.. அது எப்படி "விக்கிபீடியான்னு அமைங்க"? படத்தை பாருங்க. அந்த பெட்டியிலே ஒரு சின்ன அம்புக்குறி இருக்கா? அதை அமுக்கினா என்ன என்ன தேடு பொறி இருக்குன்னு தெரிஞ்சுடும். அதில விக்கி முன்னிருப்பா இருக்கும். நமக்கு வேன்டியது அந்த பட்டியல்லே இல்லைன்னா manage search engines ஐ சொடுக்கினா கூடுதல் தேர்வுகள் கிடைக்கும். வார்த்தைக்கு அர்த்தம் பாக்க டிக்ஷ்னரி, அடிக்கடி ஏதாஅவது வாங்க ஆசாமிக்கு ஈபே, ஒரு விஷயம் பத்தி முழுக்க என்சைக்ளொபீடியா மாதிரி தெரிஞ்சுக்க விக்கிபீடியா ..இப்படி பல தேடு பொறிகள் இருக்கு.

ஆமா இன்டர்நெட் ஒரு தகவல் சுரங்கம். சட்டையிலே கொட்டின சாம்பார் கறையை போக்கறதுலேந்து ஆன்மீகத்தில ஆவரணம்ன்னா என்ன என்கிறது வரை எல்லா தகவலும் அங்கே இருக்கு! அதை சரியா பயன்படுத்திக்கிறது நம்ம சாமர்த்தியம்.

Wednesday, December 8, 2010

இப்படீஈஈஈஈ போலாமா?

சரி ஏதோ ஒரு நல்ல உலாவியை தேர்ந்தெடுத்து நிறுவச்சொல்லுங்க. ம்ம்ம்ம்! இன்னும் நிரல்கள் நிறுவறது எல்லாம் சொல்லித்தரலையே!

உலாவியோட விரைவு விசை டாஸ்க் பார்லே இருக்கும். அதை சொடுக்குங்க! அப்புறம் இப்படி ஈ ஈ ஈ  போயிட்டு வந்தா அது திறந்து ஏதோ ஒரு வலைப்பக்கத்தை காட்டிகிட்டு இருக்கும். வேற என்ன பக்கம் அதோட இல்ல பக்கம்தான். நம்ம அபிமான பயர்பாக்ஸை பாருங்க. [படம் சரியா தெரியலைன்னா அதன் மேலே சொடுக்குங்க]

From browser

அட ஆமாம். தமிழ்லே இருக்கு!
சரி, அடுத்து எங்கே போகனுமோ அந்த முகவரியை உள்ளே தட்டுங்க! எங்கேவா? மேலே காலி பெட்டி ஒண்ணு மையமா இருக்கே அதான்! http://techforelders.blogspot.com/ ன்னு தட்டியாச்சா?
அதானே பாத்தேன்! நீங்க யாரு? இதை காபி பேஸ்ட் பண்ணினீங்கதானே?
ஓ ஏற்கெனெவே இதை படிச்சுகிட்டு இருக்கிறதால ஒண்ணு உங்களுக்கே எப்படின்னு தெரியும்; இல்லை யாராவது திறந்து கொடுத்து இருக்காங்க. அப்படி யாரும் திறந்து கொடுத்து இருந்தா அவங்களை இனிமே தொந்திரவு பண்ணாம நாமளே திறந்துக்கலாம்.
சரி முகவரியை தட்டினதும் இந்த பக்கங்கள் திறந்தாச்சு. படிச்சுட்டு பின்னூட்டம் போட்டுட்டு மூடிடலாம்.

யாருய்யா இந்த http, அப்புறம் : ம்ம்ம் // இதெல்லாம் ஞாபகம் வெச்சுகிட்டு இருக்கிறதுன்னு கேட்டா,

நல்ல கேள்வி. இந்த வயசுக்கு இதெல்லாம் வேற ஞாபகம் வெச்சுக்கணுமா? தேவையே இல்லை!

மேலே வலது பக்கம் ஒரு தேடல் பெட்டி தெரியுது பாருங்க!
அதிலே techforelders மட்டும் அடிங்க!

From browser

கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்ம வலைப்பூ மூணாவது இடத்திலே இருக்கு! கூகுள் கொஞ்சம் அன்னியாயம் பண்ணி வேற ரெண்டு முன்னாடி காட்டுது.
சரி தொண்டுகிழங்களுக்குன்னு தமிழ்ல அடிச்சு பார்க்கலாம்! யாஹோ! எல்லாமே நம்ம லிங்க்தான்!

From browser

சொல்ல வந்தது என்னன்னா நிறைய விஷயங்களுக்கு சும்மா கூகுள் தேடல் பண்ணா போக வேண்டிய இடம் அனேகமா அகப்படும். சும்மா உங்க பேரை அடிச்சு பாருங்க!

Tuesday, December 7, 2010

உலாவி.....

சரி இப்ப உலாவிகளை பார்க்கலாம்.
விண்டோஸ் கூடவே வரது இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர்.
பெரும்பாலான பேர்கள் இதையே பயன்படுத்தறதாலே பிரச்சினை செய்ய விரும்பறவங்க இதையே குறி வைக்கிறாங்க. இந்த ஒரு காரணத்துக்காகவே இதை பயன்படுத்தாம இருக்கலாம்!
என் அபிமான நக்‌ஷத்திரம் .... ஹிஹிஹி .... உலாவி பயர்பாக்ஸ்!முதல்லே பினிக்ஸ் ன்னு பேர் வெச்சுண்டு இருந்தது. அப்புறம் பயர் பேர்ட். அப்புறம் பயர்பாக்ஸ்! இங்கே கிடைக்கும்.


இதோட இஞ்சின் வேற. அதனால இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை பாதிக்கிற வைரஸ் மால்வேர் ப்லாப்லா எல்லாம் இதை பாதிக்கணும்ன்னு இல்லை.
முதன் முதல்லே வந்தப்ப பயர்பாக்ஸ் ஒரு அருமையான திட்டத்தோட இருந்தது. அடிப்படை பயர்பாக்ஸ் ன்னு வந்தது. எந்த கூடுதல் வசதி வேணும்னாலும் அதை ஒரு நீட்சியா (addon) நிறுவிக்க வசதி செஞ்சாங்க. ஜாவா வேணுமா? சேத்துக்கோ! ப்ளாஷை தடுக்கணுமா? அதுக்கு ஒரு நீட்சி. விளம்பரம் எல்லாம் தடுக்கணுமா? அதுக்கு இன்னொன்னு.
அடிப்படை பயர்பாக்ஸ் அளவு சின்னதுதான். தேவைக்கேட்ப பெரிசாக்கிக்கறதாலே, நமக்கு வேண்டியது மட்டுமே நிறுவிக்கொள்ளறதாலே - தரவிறக்கமோ திறக்கிறதோ சீக்கிரம் நடக்கும்.

இது திறந்த மூலம் (open source) என்கிறதால பலரும் நீட்சிகளை தயர் செய்து சேத்தாங்க. சமீப கணக்குப்படி  இது வரை தரவிறக்கின நீட்சிகள் 2 பில்லியனை தாண்டியாச்சு! சரியா இதை எழுதறப்ப 2,236,914,095 add-ons downloaded; 172,165,851 add-ons in use. இங்கே போய் பாத்தா தரவிறக்க  வகை வகையா பிரிச்சு நீட்சிகளை பார்கலாம். ஏறத்தாழ 13,000 இப்ப கிடைக்குது!


ஒபெரா நடுவில வந்தப்பறம் வேகம் வேகம் ன்னு போட்டி ஆரம்பிச்சது. இப்பவும் இந்த போட்டி நடந்துகிட்டுத்தான் இருக்கு! ஒபெராவும் நல்ல உலாவி. இங்கே கிடைக்கும். [அஷ்வின் அந்த பக்கத்திலே இருக்கிற படத்த பாருங்க!]

இந்த உலாவி சண்டையிலே லேட்டஸ்ட் பையன் க்ரோம். அதுவும் நல்லாவே இருக்கு. பயர்பாக்ஸ் மாதிரியே இதுக்கும் நீட்சிகள் உண்டு. இங்கே கிடைக்கும்.

சபாரி,  ஆப்பிள் மேக் கம்ப்யூட்டருக்கானது. விண்டோஸுக்கு தயார் செஞ்சு இருக்காங்க. இங்கே கிடைக்கும்.

என்ன நீங்க பாட்டுக்கு நல்லா இருக்குன்னு சொல்லிகிட்டே போனா என்ன அர்த்தம்ன்னு கேட்டா....
ஹிஹிஹி இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் தவிர எல்லாமே நல்லா இருக்கும்.

ஒரு வேளை உலாவிகளைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்க அவசரம்ன்னா இங்கே போய் பாருங்க.
{பி.கு:  ஏன் எபிக் பத்தி எழுதலை? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னா அது பயர்பாக்ஸ்தான். வேஷம் போட்டுகிட்டு இருக்கு. சில கூடுதல் வசதிகள் இருக்கிறதால பயர்பாக்ஸ் அபிமானிகள் எபிக்கையும் பயன்படுத்தலாம்! }

அடுத்த பதிவுல நிச்சயமா நெட் உள்ளே போயிடலாம்.

Friday, December 3, 2010

அங்கிள் வைரஸ், ஆன்டி வைரஸ் ....

வைரஸ் என்கிறது ஒரு கெட்ட வஸ்து. அது சின்ன ப்ரோக்ராம். வைரஸ் மாதிரியே தொத்திக்கும், மத்த கணினிகளிலே! அங்கே போய் பல்கி பெருகும்.அப்புறம் புது இடம் தேடி போகும். அதனால்தான் வைரஸ்ன்னு பேர் வெச்சாங்க.


அதுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாம நெட்லே இறங்கினா 20 நிமிஷத்திலே நிச்சயமா கணினி பாதிக்கப்படும்ன்னு சொல்றாங்க.
ஒரு உதாரணம் பார்க்கலாம்.

Here is an example of just how fast a virus can spread. One of the fastest spreading computer viruses was the one known as the "Slammer Worm" It started when someone sent some code to a SQL server where it sneaked in through an open unprotected port. Once it was in that server, the Slammer generated a set of random Internet addresses and scanned them for other unprotected computers. Then it infected them. From the computers it infected, it generated more IP addresses, scanned them and infected them. Seems like a nightmare doesn't it?

The Slammer worm was relentless. In the first minute of existence, it doubled the number of machines that it infected every 8.5 seconds. In just three minutes it was scanning 55 million targets per second! Within 10-minutes, 90 percent of all unprotected computers in the world were infected. Luckily that is all that it did was spread. What a nightmare it would have been if it carried a payload that actually damaged computers.

ஸ்லாமர் ன்னு ஒரு வேர்ம் வகை வைரஸ். ரொம்ப சின்னது! (376 பைட்டுகள்தான்) பாதுகாப்பில்லாத ஒரு எஸ்க்யூஎல் சர்வருக்கு அனுப்பியதும் அங்கே போய் குறிப்பில்லாத இன்டர்நெட் அட்ரஸ்கள் பலது உருவாக்கி அதிலே பாதுகாப்பு இல்லாத கணினி எதெல்லாம்ன்னு பாத்து நுழைஞ்சதாம். ஒவ்வொரு 8.5 செகண்டுக்கும் பாதிக்கப்பட்ட கணினி நம்பர் இரட்டிப்பாச்சு. ச்சும்மா மூணே நிமிஷத்துல அது தன் சகாக்களோட 55 மில்லியன் கணினிகளை ஆரய்ஞ்சு கொண்டு இருந்தது. பத்தே நிமிஷத்திலே உலகத்தில இருக்கிற பாதுகாப்பு இல்லாத கணினிகளிலே 90 சதவிகிதம் (22,000) பாதிக்கப்பட்டது. நல்ல காலம்! இது பரவுகிறதைத்தவிர வேறு ஏதும் செய்யலை. இது கூட கணினியை பாதிக்கிற மாதிரி ஏதும் இருந்து இருந்தா அம்போதான்! அப்படியும் இதால பிஸியான வழிகள் எல்லாம் அடைஞ்சு போய் பாதிப்பு இருந்தது.
இதில என்ன பரிதாபம்ன்னா மைக்ரோசாப்ட் தன் எஸ்க்யூஎல் சர்வர் மென்பொருளிலே ஓட்டை இருக்குன்னு தெரிஞ்சு ஆறு மாசம் முன்னாடியே அதுக்கான தீர்வை வெளியிட்டு இருந்தது. பலரும் அதை நிறுவலை, மைக்ரோசாப்ட் லேயே வேலை செய்யறவங்க உட்பட!
ஸோ இதுக்கு பாதுகாப்பு இல்லாம நெட்லே இறங்கக்கூடாது.
பல ஆன்டி வைரஸ் இலவச மென்பொருட்கள் இதுக்காக இருக்கு. அதிகம் வித்தியாசம் இல்லை. எதை வேணுமானாலும் நிறுவிடலாம். முக்கியமா அதை ஒவ்வொரு முறை நெட்டுக்கு இறங்கும் போது அப்டேட் செய்யணும். இப்ப வர முக்கால்வாசி ப்ரோக்ராம் தானே அப்படி அப்டேட் செய்துக்கிறது போலத்தான் வெச்சு இருக்காங்க!சரி வைரஸ் தாக்கம் வந்தா என்ன ஆகும்? முன் காலத்துல என்ன வேண்ணா ஆகும். கணினி செயலிழக்கும். இல்லை திடீர்ன்னு ஒரு சாளரம் திறந்து ஏதாவது ஒரு செய்தியை சொல்லும். அனேகமா தப்பிக்கக்கூடியது நெட் இணைப்பு மட்டும்தான்! ஏன்னா அது பரவணுமே? :-)) இப்ப செய்தி சேகரிச்சு அனுப்பற மால்வேர்கள்தான் அதிகம்.
முன்னே ப்ளாப்பிதான் வைரஸோட அபிமான பரவு ஊடகம். இப்ப யூஎஸ்பி ட்ரைவ். ப்ரிண்டுக்காக கோப்பை வெளியே அனுப்பற ட்ரைவை பிறகு பார்மேட் செய்தே உபயோகிக்கணும். அதிலே வேற முக்கிய கோப்பு எதுவும் வெச்சு இருக்ககூடாது.
வைரஸ் பத்தி பிறகு விரிவா பார்க்கலாம். இப்போதைக்கு அந்த பாதுகாப்பு முக்கியம்ன்னு தெரிஞ்சா போதும்.

Thursday, December 2, 2010

இன்டர்நெட்

ம்ம்ம் யாரோ அங்கே கடிஞ்சுக்கிறாங்க. நெட்டுக்கு போக துடிக்கிறோம் ன்னா நீ பாட்டு சீட்டு விளையாடிண்டு இருக்கயே?
சரி சரி போகலாம். ஆனா சில விஷயங்கள் தெரியாம உள்ளே நுழையறது தப்பு. அப்புறம் வருத்தப்பட வேன்டி இருக்கும்.
முதல்ல உலாவியை பார்க்கலாம்.
உலாவி? அதான் ப்ரௌஸர் ன்னு சொல்லறாங்களே அது.
அது எதுக்கு பயன்படுது? நம்ம கணினியிலே இருக்கிறதை விண்டோஸ் எக்ஸ்ப்லோரர்லே பாத்த மாதிரி... ம்ம்ம்.. அதான் முன்னேயே சொன்னேனே?.. //முன்னே மாதிரி செய்த மாதிரி ஸ்டார்ட்> ஆக்ஸசரீஸ் > விண்டோஸ் எக்ஸ்ப்லோரர், இப்படிப்போய் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் ஐ சொடுக்கினா புதுசா ஒரு பொட்டி திறக்கும். அங்க இடது பக்கம் மை டாகுமெண்ட்ஸ் ன்னு இருக்கா? அதை சொடுக்குங்க!//
முன்னே நம்ம கணினியிலே இருக்கிறதை பக்கம் பக்கமா பாத்த மாதிரி இப்ப உலகத்திலே பல இடங்களிலே இருக்கிற கணினிகளோட பக்கங்களையும் பார்க்கலாம். அட!
ஆமாம். ஒரு வெப்சைட் பாக்கிறோம்ன்னா அதான் அர்த்தம்.
நம்ம கணினியிலே இருக்கறதை பார்க்கிறதிலே நமக்கு பிரச்சினை இராது. வேற கணினின்னா அதை எப்படி இணைக்கிறது?
ஒரு டெலிபோன் கம்பி மூலமா செய்யலாம்.
இல்லை வயர்லெஸ்..அதை அப்புறம் பார்க்கலாம்.
அனேகமா இப்ப எல்லாருமே ப்ராட்பேண்ட் வெச்சு இருக்காங்க. டயல் அப் காணாம போயாச்சு.
நம்ம கணினியிலே இருக்கறதை பார்க்க விண்டோஸ் எக்ஸ்ப்லோரர்.
அதுவே வெளி உலகம் ன்னா இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர்.
இந்த இன்டர்நெட் ன்னா என்ன?
அது வந்து ம்ம்ம்ம் .... அம்ம்ம்ம்.... உங்க ஊர்லே மழை பெய்யறதா?
ஹிஹிஹி! சுலபமான கேள்வியா கேட்க்கப்படாதா? ஒபாமாவுக்கு அப்புறம் யார் வருவாங்க? நீரா ராடியா விவகாரத்தில அடுத்து யார் மாட்டுவாங்க? தமிழ் நாட்டிலே அடுத்த தேர்தல்லே யார் ஆட்சிக்கு வருவாங்க? இப்படி எல்லாம் கேட்கக்கூடாதா?
இன்டர் நெட்ன்னா ...... இன்டர்நெட் தான். அதாகப்பட்டது உலகத்திலே பல இடங்களிலும் இருக்கிற பல கணினிகளோட வலைப்பின்னல்.நம்ம அதிலே இணைப்பு ஏற்படுத்திகிட்டா நாமும் அதிலே ஒரு பாகம். இணைப்பு ஏற்படுத்திக்க இல்லைன்னா இல்லை. சேரும் போது பாகம்; இணைப்பை அறுத்துகிட்டா இல்லை. ம்ம்ம்ம் .... அப்ப இது ஒரு டைனமிக் சமாசாரம். மாறிகிட்டே இருக்கக்கூடியது.
ஆனா ஒரு பகுதி செர்வர்கள், ரூட்டர்கள், ஸ்விட்ச்கள் ன்னு சில வஸ்துக்கள் எல்லாம் எப்பவுமே இருக்கும். அனேகமா கணினிகள்தான் சேரும், விலகும்.
இன்டர்நெட் ன்னா இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் ன்னு சொன்னாலும் நான் அதை பரிந்துரைக்க மாட்டேன். ஏன்னு எல்லாம் அப்புறம் பார்க்கலாம். பயர்பாக்ஸ், க்ரோம், ஒபெரான்னு இன்னும் பல இலவசமா கிடைக்கிற உலாவிகள் இருக்கு. அதிலேந்து ஒண்ணை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்க. என்னோட பேவரிட் பயர்பாக்ஸ். அதனால் அதை ஒட்டியே மேலே போகலாம். மற்ற உலாவிகளும் ஏறத்தாழ இது போலவே இருக்கும். விரைவு விசைகள் மாதிரியான பயன்பாடுகள் எல்லாமே ஒண்ணுக்கு ஒண்ணு சமமா இருக்கலாம். அதனால் இதை படிச்சாலே மத்ததும் புரிஞ்சுடும்.
நெட்டுக்குள்ளே போகு முன் உங்க கணினியிலே ஆன்டி வைரஸ் நிரல் இருக்கான்னு சோதிச்சு பாத்துக்குங்க.
ஏன்?
ஏன்னா அது ரொம்ப முக்கியம்....

Wednesday, December 1, 2010

சொலிடேர்

சரி நோட்பேடிலே வேலை செஞ்சு செஞ்சு களைச்சு போயிட்டோம்! கொஞ்சம் விளையாடலாமா? என்ன விளையாடறது? என்ன சார்! ஒரு சீட்டுக்கட்டு இருந்தா கலைச்சு போடுங்களேன் அப்படிங்கிறீங்களா? ஹிஹிஹி! செஞ்சாபோச்சு! ஆமாம் கணினியிலே நிறைய சீட்டுகட்டு விளையாட்டு விளையாடலாம்.
எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விளையாட்டு பேஷன்ஸ் என்கிற சாலிடேர் என்கிற .... சரி சரி.. புரிஞ்சுபோச்சில்லே?
விண்டோஸ் ஆனாலும் லீனக்ஸ் ஆனாலும் இந்த விளையாட்டு இருக்கவே இருக்கும். ஆனா க்கும்.. லீனக்ஸ்லே பாருங்க, எவ்வளொ அழகா இருக்கு! எவ்வளொ பெர்ர்ர்ர்ர்ரிய திரை கொடுத்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்க தெரியலை விண்டோஸுக்கு. என் உபுண்டு எவ்வளோ அழகா பெரிசாக்கி போடுது பாருங்க! (ம்ம்ம்.. மத்தவங்களுக்கு நம்மகிட்டே ஒரு மதிப்பு வரணும்ன்னா இதை ஸ்கேல் பண்ணி போடுதுன்னு சொல்லணும்! ஸ்கேல் பண்ணறதுன்னா சின்னதாகவோ பெரிசாவோ தகுந்தபடி மாத்தி போடறதுன்னு அர்த்தம்.)
ரைட் விண்டோஸுக்கு ஸ்டார்ட் >ப்ரொக்ராம்ஸ்>கேம்ஸ் - இங்கிருந்து தேர்ந்தெடுங்க.
உபுண்டுன்னா அப்ளிகேஷன்ஸ் > கேம்ஸ்> ஐல்ரைட் சொலிடேர். சரியா?

From solitare

ஜம்ன்னு சீட்டு கலைச்சு போட்டாச்சா? ம்ம்ம்ம்.. இந்த செவப்பு ரெண்டு கருப்பு மூணு கீழே போகலாம் போல இருக்கே! எடுத்து போடுங்க!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... சீட்டானா எடுத்து போடலாம். கணினி திரையிலே இருக்கறதை எப்படி எடுத்து போட முடியும்? ன்னு கேட்டா.....
சரி சரி! இப்ப ரெண்டு ஹார்ட்ஸ் மேலே சொடுக்கியை வையுங்க! சொடுக்கியோட இடது பொத்தானை.... ம்ம்ம். கொஞ்சம் யோசிச்சு எது இடதுன்னு கண்டு பிடிங்க! ஆங்! அதான். இது கொஞ்ச நாளிலே பழகிடும். இடது பொத்தானை அமுக்கி, விடாம அப்படியே பிடிச்சுகிட்டு சொடுக்கியை நகர்த்துங்க. (கமா போட்டு இருக்கேன் சரியா படிங்க! :-) சீட்டும் நகரும். அதை அப்படியே இழுத்து கருப்பு மூணு மேலே கொண்டு வந்த பிறகு பட்டனை விட்டுடலாம். கப்புன்னு சீட்டு சரியான இடத்திலே போய் உக்காந்துக்கும். சரியான சீட்டா இல்லைன்னா பட்டனை விட்டதும் சீட்டு திரும்பி ஓடிபோயிடும்! ஹிஹிஹி!

From solitare

சரி அடுத்து மேலே புதுசா சீட்டை திருப்பணுமே? மேல் இடது கோடி சீட்டு மேலே சொடுக்குங்க. சீட்டு திரும்பும். தகுந்தபடி சீட்டுகளை இழுத்து விடுங்க.

From solitare

நடுவிலே வந்த ஒரு நிலை படத்த பாருங்க.

From solitare

இரண்டு டயமண்ட் ஏஸ் டயமண்ட் மேலே போகணும். இதை வழக்கபடி இழுத்தும் விடலாம். இல்லை இரட்டை சொடுக்கு சொடுக்கினா அது தானே போய் சேர்ந்துடும். எந்த சீட்டுமே ஏஸ் வரிசைக்கு போக வாய்ப்பு இருந்தா இப்படி போகும் படி அமைப்பு இருக்கு!
இதை கொஞ்சம் விளையாடினா இந்த சொடுக்கு சமாசாரம் எல்லாம் பிடிபட்டுடும். அதுக்குத்தான் இதை ...ஹிஹிஹி!