Sunday, October 30, 2011



சரி இன்னைக்கு மீதி கூகுள் ப்ளஸ் சமாசாரம் எல்லாம் பாத்துடலாம்.


இதான் படம் போடற சமாசாரம். ஒண்ணும் புதிசு இல்லை. மேலே கூகுள் ப்லஸ் க்கு பக்கத்தில இருக்கிற வீடு ஐகானுக்கு அடுத்து இருக்கிற ஐகாம் படங்களுக்கானது. இடது பக்க மெனுவில கீழே யுவர் ஆல்பம்ஸ்.  நம்ம பிகாஸால ஏத்தற எல்லாமே பப்ளிக் ன்னு இருந்தா இங்கே வந்துடும்.




அதுக்கு மேலே போஸ்ட் படங்கள். நம்ம இங்கே  கூ+ ல  போஸ்ட் போட்டா அந்த படங்களும். கீழே பாருங்க. வலது பக்கம் மேலே சிவப்பு கட்டம் கட்டி படம் ஏத்த லிங்க் பட்டன் இருக்கு.




 விடியோக்களுக்கு தனி மெனு. போட்டோஸ் ஐகான் க்கு வலது பக்கத்திலே. இதுவும் பிகாஸாலேந்து போடுகிறது.



அடுத்து கூகுள் ப்ளஸ் ன்னு ஐகான். இது எதுக்குன்னு ஆரம்பத்திலே புரியாது. நாம பாக்கிற வலை தளங்கள் ப்ளாக் பலதிலேயும் G + ன்னு ஒரு லிங்க் பார்க்கலாம். அதை சொடுக்கினா அந்த பதிவு இங்கே சேர்ந்ந்துடும். அதாவது நமக்கு பிடிச்ச வலை சமாசாரங்களை ஷேர் செய்கிற விஷயம் இது.




கடைசியா பஸ். பஸ் மூடிற வரை அது இங்கேயும் வந்ந்து கொண்டு இருக்கும். இங்கேயே அதை பார்க்கலாம். மெதுவா எல்லாரையும் இங்கே வர வழைக்கிற உத்தி போல இருக்கு!


சரி! மெய்ன் மெனுவுக்கு போனா அடுத்து வட்டங்கள். நேத்தே பாத்தாச்சு.
அடுத்து கேம்ஸ். இதில ஆன் லைன் கேம்ஸ் மாதிரி ஆடலாம் போல இருக்கு. நான் பார்க்கலை; சுவாரசியம் இல்லை.


ம்ம்ம் அவ்வளோதான். இன்னும் ஒரே ஒரு சின்ன சமாசாரம். வலையை தேடுகிற மாதிரி G+ லேயும் தேடலாம். உதாரணமா ஆந்த்ராய்ட் மொபைல் பத்தி g+ ல என்ன எழுதி இருக்குன்னு தேடலாம். தேடலை சேமிக்கலாம். எழுதினது பிடிச்சு இருந்தா ஆசாமியை பாலோ பண்ணலாம்; வட்டத்தில சேர்க்கலாம்.


கூகுள் ப்ளஸ் சமாசாரம் முடிஞ்சது. சின்ன பசங்க சின்ன பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் கை தட்டுங்க! :-)

Saturday, October 29, 2011

கூகுள் ப்ளஸ் -1

கூகுள் ப்லஸ் பத்தி இப்ப எல்லாரும் கேட்டுகிட்டு இருக்காங்க. நம்ம தொண்டு கிழங்கள்தான் இதுக்கு உதவணும். ம்ம்ம்ம்ம்... இது கூட செய்யாட்டி எப்படி? நம்ம ஜிமெய்ல் பேஜ்ல இடது மேல் மூலையிலே பாத்தா அங்கே ப்ளஸ் ஐகான் பார்க்கலாம்.



அதை சொடுக்கின்னா ப்ளஸ் பக்கத்துக்கு போயிடலாம்.


இடது பக்கம் நாம உருவாக்கின வட்டங்கள் இருக்கு. எப்படீ உருவாக்குகிறதுன்னு அப்புறம்
பார்க்கலாம். இதிலே தேர்வு செய்கிறது மட்டும்தான் அடுத்து தெரியுது. மேலே மித்ரான்னு இருக்கே, அது கீழே ஷேர் வாட்  இஸ் நியூ. இங்கே மித்ரான்னு ஏன் இருக்கு? அதைதான் இடது பக்கம் தேர்வு செய்திருக்கேன்.  இங்கேதான் டைப் அடிக்கனும். அடிச்சா தோற்றம் மாறிடும்.


அதுக்கு கீழே இருக்கிற இடத்தில நாம் தேர்ந்தெடுக்கிற வட்டம் இருக்கு. மேலும் வட்டங்களை கூடுதலாயும் சேர்க்கலாம். எல்லாம் முடிஞ்ச பிறகு ஷேர் பட்டனை அமுக்குங்க. முடிஞ்சது.

சரி வட்டம் எப்படி உருவாக்கறது?


இதிலே நாலாவது ஐக்கானை சொடுக்குங்க....


இங்கே மேலே கர்சர் இருக்கிற இடம் பாருங்க. நாம் யாரை எல்லாம் வட்டத்தில வெச்சு இருக்கோமோ அவங்க பட்டியலுக்கு ஒரு டேப்; நம்மளை மத்தவங்க வட்டத்தில வெச்சு இருந்தா அவங்களூக்கு ஒரு டேப்; இது வரை இந்த ரெண்டும் செய்யலைன்னா ஜிமெய்ல் அக்கவுண்ட் லேந்து அட்ரஸ் தேர்ந்தெடுத்து சேர்க்க மூணாவது டேப். கீழே வட்டங்கள் இருக்கு. இடது கோடியில காலி வட்டம். நான் முன்னேயே சில வட்டங்கள் உருவாக்கியதால இப்படி தெரியுது. இல்லாட்டா காலி வட்டம் மட்டுமே தெரியும். அப்புறம் மேலேந்து ஆசாமியை இழுத்து கீழே வட்டத்தில விட வேண்டியதுதான். ஒரே ஆசாமியை ரெண்டு மூணு வட்டத்திலேயும் சேர்க்கலாம்.



திருப்பி ஹோம் க்கு போகலாம். இப்ப நாம் உருவாக்கின வட்டம் எல்லாம் தெரியும். முன்னே சொன்னபடி செய்தி ஆரம்பிச்சு தேவையானா ஆட் மோர் ந்னு சொடுக்கினா இன்னும் சில வட்டங்களை சேர்க்கலாம். அப்புறம் ஷேர் பட்டனை சொடுக்கலாம். முடிஞ்சது.

இப்ப மத்தவங்களது போஸ்டை எப்படி பார்க்கிறது? அவரை நாம் எந்த வட்டத்தில வெச்சிருக்கோமோ அந்த வட்டத்தை ஸ்ட்ரீம் ல சொடுக்கினா அவர் போட்டதெல்லாம் பார்க்கலாம். கமென்ட் போடறது பஸ் மாதிரியேதான்.
எந்த வட்டமும் தேர்ந்து எடுக்கலைன்னா எல்லார் போஸ்டும் - நம்ம வட்டம், நாம யார் வட்டத்தில இருக்கோமோ அவங்க போட்டது எல்லாமே வந்துகிட்டு இருக்கும். இது கொஞ்சம் தொல்லைதான். பிடிக்காத போஸ்டை ம்யூட் பண்ணலாம். பிடிக்காத ஆசாமியை ப்ளாக் பண்ணலாம்.

அடுத்த போஸ்ட் ல மேலே அதிக சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்..

Friday, June 24, 2011

சொடுக் சொடுக்!

ரைட்! தொ.கி எல்லாரும் நிமிர்ந்து உக்காருங்க!
இன்னிக்கு நம்ம நமக்கு ரொம்ப பயனாகக்கூடிய ஒரு மென்பொருள் விஷயத்தை பார்க்கப்போறோம்.
இந்த சின்னப்பசங்களோ கிடுகிடுன்னு சொடுக்கியால சொடுக்கிக்கிட்டே போறாங்க. நமக்கோ அது கொஞ்சம் சேலஞ்சிங் ஆவே இருக்கு. சொடுக்கப்போனா சொடுக்கி -அதாங்க - மௌஸ் நகர்ந்து போயிடுது. ஒரு இடத்தில சொடுக்க நினைச்சது இன்னொரு இடத்தில சொடுக்கினதாயிடுது. ஒரு வஸ்துவை இன்னொரு இடத்துக்கு அழுத்துபோக பாத்தா அது நடுவிலே எங்காவது போய் சேர்ந்துடறது! இல்லை விரல்ல ஆர்த்ரைடிஸ் இருக்கறதால வலிக்குது. இல்லை ஒரு நாளுக்கு எவ்வளோதான் சொடுக்கறது? கணக்கு பண்ணா அது நூத்துக்கணக்கில போகும் போல இருக்கு! மேலும் கார்பல் டனல் சிண்ட்ரோம் மாதிரி நரம்பு பிரச்சினை இருக்கறவங்களூம் கஷ்டப்படுறாங்க. நடு நடுல பாவம் இந்த சொடுக்கியை இவ்வளோ சொடுக்கினா அதுக்கு வலிக்காதான்னு வேற தோணுது!

இப்படி விரல்கள்ல பிரச்சினை, நரம்பு பிரச்சினை, மூட்டு பிரச்சினை, எலும்பு பிரச்சினை, ஹிஹிஹி ... ஏதோ ஒரு பிரச்சினையால சொடுக்கியை பயன்படுத்த கஷ்டப்படறவங்களை உத்தேசிச்சு சில வசதிகள் செஞ்சு இருக்காங்க. லீனக்ஸ்ல இது இலவசமா கிடைச்சாலும் விண்டோஸ்காரங்க, பாவம் பரம ஏழையா இருக்கறதால, அதை விண்டோஸ்ல சேர்க்கலை. வெளியே காசு கொடுத்து வாங்கச்சொல்லறாங்க. ம்ம்ம்ம் அப்படி லேசில விட்டுடுவோமா? தேடித்தேடி இலவச மென்பொருள் ஒண்ணையும் பிடிச்சாச்சு.

முதல்ல உபுண்டுவை பாத்துடுவோம். ஹிஹிஹி! அது விண்டோஸை விட எவ்வளோ நல்லதுன்னு பின்ன எப்பதான் சொல்லறது?
உபுண்டுல எப்படி இந்த வசதியை செஞ்சுகறது? சிஸ்டம்> ப்ரிபெரன்சஸ் > அசிஸ்டிவ் டெக்னாலஜி இதெல்லாம் வரிசையா சொடுக்குங்க... இப்போதைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு... அப்புறம் இப்படி சொடுக்க கஷ்டமிராது..

From dwellclick

மௌஸ் ஆக்ஸஸபிலிடி ஐ சொடுக்குங்க....

From dwellclick

இனிஷியேட் க்ளிக் வென் ஸ்டப்பிங் பாய்ண்டர் மூவ்மென்ட் ன்னு தெரியுது இல்ல, அதுல பெட்டில சொடுக்கி ஒரு டிக் மார்க் ஏற்படுத்துங்க. எவ்வளோ நேரம் கழிச்சு அது க்ளிக்கணும், கொஞ்சம் நகர்ந்தா போதுமா இல்லை நிறைய நகரணுமான்னு எல்லாம் இங்கெ கீழே செட் பண்ணலாம். இதை கொஞ்சம் மெனெக்கெட்டு சரியா செட் பண்ணா அப்புறம் சும்மா கொஞ்ச நேரம் நின்னதுக்கெல்லாம் சொடுக்கு விழாது! சரியான இடத்திலதான் சொடுக்கறோமான்னும் நேரம் எடுத்து பாத்துக்கிடலாம்!

From dwellclick

எந்த மாதிரி சொடுக்கு விழணும்? வழக்கமா நாம செய்யற இடது சொடுக்கா? சிலருக்கு சொடுக்க வரும் ஆனா இந்த ரெட்டை சொடுக்குத்தான் பிரசினையா இருக்கும். அவங்க இங்கே ரெட்டை சொடுக்குன்னு அமைக்கலாம். இதுக்கு ஷோ க்ளிக் டை விண்டோ ன்னு டிக் அடிச்சா திறக்கிற சாளரத்திலே அட்ஜஸ்ட் பண்ணலாம்.

From dwellclick

From dwellclick



இதுவும் இல்லாம இன்னொரு வசதியும் இருக்கு. சொடுக்கியை எப்படி நகர்த்தறோம்ன்னு பாத்து தேர்வு செய்ய முடியும். இந்த படத்தில பாருங்க பட்டியலை. மேலே நகர்த்தினா சாதா ஒத்தை இடது சொடுக்கு ன்னு ஆரம்பிச்சு மத்ததும் இருக்கு. சொடுக்கியை கீழே நகர்த்தினா இழுக்கிற பாங்குக்கு  போயிடும். நிதானமா இழுத்துக்கிட்டே போய், தேவையான இடம் வந்ததும் சட்டுனு ஒரு மேல் பக்க இழுப்பு, அவ்வளோதான். இழுத்து விட்டாச்சு!



From dwellclick


ம்ம்ம்ம் அப்புறம் விண்டோஸ்.
 நம்ம மாதிரி ஆசாமிங்களுக்காவே இங்கே ஒரு இலவச மென்பொருள் இருக்கு. தரவிறக்கி பயன்படுத்தலாம். எல்லா விண்டோஸ் லேயும் வேலை செய்யுதாம்...எக்ஸ்பி, விஸ்டா, 7 ... பயன்பாடு முன்னே சொன்ன மாதிரியேதான்.
ஹாப்பி சொடுக்கிங்!

Tuesday, June 7, 2011

உதவி -2 -கூகுள் தேடல்...

உதவி கணினில எப்படின்னு பார்த்தோம்.
கணினில இருக்கிற ஹெல்ப் பக்கங்களில எல்லாத்துக்கும் உதவி இருக்கும்ன்னு சொல்ல முடியாது. பின்ன என்ன செய்யரதாம்? இருக்கவே இருக்கார் கூகுளார்! (சரி சரி உங்களுக்கு பிடிச்சு இருந்தா யாஹூ யார், பிங் யார் ன்னு சொல்லிக்குங்க!)
பொதுவா கூகுள் தேடலை பார்க்கலாம். உதவி வேறு ஒண்ணுமில்லை. என்ன பிரச்சனையோ அதை அப்படியே ஒத்தர்கிட்ட கேட்கிற மாதிரி டைப் அடிக்க வேண்டியதுதான்.

From google search

முதல் படத்தில பாருங்க! டைப் அடிக்கும்போதே அடுத்து என்ன வரலாம்ன்னு ஊகிச்சு காட்டுது. ஹெர்பிஸ் பத்தி தேடப்போய் அதுகாட்டும் பக்கத்தையும் இடது பக்கம் இருக்கிற தேர்வுகளையும் பாருங்க.

From google search

ஹெர்பிஸ் பத்தி படங்கள் வேணும்ன்னா அதையும் கொடுக்கும்; இடது பக்கக் தேர்வுகளில இமேஜஸ் சொடுக்கினா போதும்.

From google search

விடியோ வேணுமானா அதுவும் கொடுக்கும்.

From google search

மேலும் இருக்கிற தேர்வுகளையும் பாருங்க:

From google search

தமிழ்லேயும் தேடலாம்.தமிழ்ல டைப் அடிங்க, அவ்வளோதான்!

From google search

இதே போலத்தான் நமக்கு வேண்டிய தகவலும்.
அடிக்கடி வர ஒரு ஒரு பிழை செய்தி எரர் 404. கூகுள்ல எரர் 404ன்னு ஆங்கிலத்துல டைப் அடிங்க.

From google search

பதில் கிடைக்குது பாருங்க:
From google search

நம்ம பிரச்சினையை எளிதா டைப் பண்ணி பார்க்கலாம்.

From google search

அட பதில் வருது!

From google search

இன்னும் ஒண்ணு:

From google search

கூகுள் ஊகிக்காட்டா விடை இருக்காதுன்னு இல்லை. இதை பாருங்க, ஊகம் இல்லைன்னாலும் தட்டின பிறகு விடை வருது!

From google search

From google search

இதுல எங்காவது நமக்கு வேண்டிய விடை இருக்கும். ஒவ்வொண்ணா பார்த்தா விடை கிடைச்சுடும்.

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமா வார்த்தைகள் உள்ளிடறோமோ அவ்வளவு அதிகமா நமக்கு வேண்டியது கிடைக்க சான்சஸ் இருக்கும்.

உதவி கிடைக்க இன்னும் வேற வழியும் இருக்கு. அடுத்த பதிவிலே பார்க்கலாம்.


Friday, May 20, 2011

உதவி! உதவி!

இந்த சின்ன புள்ளைங்க இருக்காங்களே, இவங்க படுமோசம்! என்னிக்காவது கணினில ஒரு பிரச்சினைன்னா ஏதாவது உதவி பண்ணறாங்களா? கிடையவே கிடையாது. சில சமயம் அவசரமா ஆபீஸ் கிளம்பிண்டே ப்லா ப்லா ப்லான்னு ஏதாவது சொல்லிட்டு போயிடுவாங்க! பிரச்சினையை தீர்ப்பாங்களா, கிடையாது. ஒரு எச்சரிக்கை செய்தி வருதுன்னு வெச்சுக்குங்க! என்னனு புரியாம பதஷ்டத்திலே பசங்களை கேட்டா முறைச்சு பாத்துட்டு போயிடுவாங்க. அப்புறம் நாம்தான் சர்வீஸ் எஞ்சினீரை கூப்பிடணும். அவர் வந்து என்னன்னு கேட்டுட்டு "ஓஹோ, ஆன்டி வைரஸ் அப்டேட் பண்னலைன்னு சொல்லுதா?" ன்னு கேட்டுட்டு ஆன்டி வைரஸை அப்டேட் பண்ணிட்டு போயிடுவார். சும்மாவா போவார்? காசு வாங்கிகிட்டுதான்! பின்னே, இந்த மாதிரி கூப்பிடத்துக்கு மெனெக்கெட்டு வந்தார் இல்லையா, நியாயம்தானே? பசங்க இதை கேள்விப்பட்டா காச் மூச் ன்னு கத்துவாங்களேன்னு சொல்லறதே இல்லை.
பின்னே என்னதான் செய்யறது?
 எல்லா நிரல்களிலேயும் அதை இயக்க தேவையான குறிப்புகளோட உதவி இருக்கு! இது எங்கே இருக்கு? இதை இயக்க கட்டளை அனேகமா எல்லா நிரல்களோட மெனுவிலேயும் கடைசியில் இருக்கும். படத்தை பாருங்க!

From help

ஹெல்ப் ஐ சொடுக்க பல நிரல்களிலேயும் ஒரு கையேடு திறக்கும். அதில நாம் பார்க்க வேண்டியதுக்கு தொடுப்புகள் இருக்கும். சொடுக்கினா கணின்னியில நிறுவிய்ருக்கிற கோப்புகளிலேந்து உதவி பக்கங்கள் காட்டப்படும்.
சில நிரல்களிலே இந்த உதவி கோப்பு ரொம்ப பெரிசா இருக்கலாம். அல்லது மாறிகிட்டே இருக்கலாம். அதனால அந்த மாதிரி நிரல்களுக்கு இணையத்திலே உதவி பக்கங்கள் இருக்கும். உதாரணமா பயர்பாக்ஸ் நிரல். எக்கச்சக்க விஷயங்கள் அதிலே செய்ய முடியும். அதனால அதோட உதவி பக்கங்கள் இணையத்திலே இருக்கும்.

From help

சின்ன நிரல்ன்னா அதன் உதவி பக்கங்களை கணினியிலேயே நிறுவிடலாம். கெடிட் சின்ன நிரல் இல்லைன்னாலும் அதன் உதவி பக்கங்கள் கணினியிலே இருக்கு!

From help

From help
முக்காவாசி நிரல்களிலே இந்த உதவி பக்கங்களுக்கு சுருக்கு வழியா F1 பங்ஷன் விசையை அழுத்தலாம்.

எல்லாம் சரி, இந்த உதவி பக்கங்களிலே நாம் தேடற விஷயம் இல்லைன்னா என்ன செய்யறதாம்????
அடுத்த பதிவிலே பார்க்கலாம்....

Thursday, April 28, 2011

அளவான குடும்பம்.....


பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.... ஒரே படமா கொஞ்ச நாள் போட்டு தள்ளிட்டேன்!
சில சமயம் ரொம்பவே உதவியாக இருக்கற மென்பொருள் ஒன்றை பார்க்கலாம்.

நல்ல புள்ளையா வேல செஞ்சுகிட்டு இருந்த கணினி திடீர்ன்னு தகராறு செய்ய ஆரம்பிக்கலாம். என்ன தகராறுன்னு ஆயிரம் இருந்தாலும் முக்கியமா சரி செய்யக்கூடிய வகையில் இருக்கிறது வட்டில இடம் போதலை என்கிறது. பின்ன சகட்டு மேனிக்கு பாத்ததெல்லாம் இது பின்னால் நமக்கு வேணாமா வேணுமான்னு யோசிக்காம சேமிச்சுகிட்டே இருந்தா? இப்படித்தான் ஆகும். போதாக்குறைக்கு எக்கச்சக்க படங்கள் பாட்டு.... ஹும்!
ஏதோ இடப்பற்றாக்குறை வந்தாச்சு. முன்னேயே இட ஒதுக்கீடு எல்லாம் கேட்டு செஞ்சிருக்கலாம். இப்ப தேர்தல் நடந்தாச்சு, அதனால் அது நடக்காது, விடுங்க!

கணினியே நான் சுத்தப்படுத்தவான்னு கேட்கும். சரின்னு சொன்னா தற்காலிக கோப்பை எல்லாம் நீக்கிடும். இன்னும் சில முன் ஏற்பாடு செய்து இருக்கீறதை எல்லாம் நீக்கும். அதுக்கும் மேலே? பல்லை உடைப்பேன் ன்னு கிட்டு மாமாவசனம் பேசாம ஆக வேண்டியதை பார்க்கலாம்.
கணினியே சொல்லும்: வேண்டாத கோப்பை எல்லாம் நீக்கி இடத்தை காலி பண்ணுப்பான்னு.
எது வேண்டியது எது வேண்டாதது னு ஒரு சர்ச்சை இருக்கலாம். அதப்பத்தி நாம் என்ன சொல்லறது? பழைய வெர்ஷன் நிரல்கள், எப்போ வேணா இணையத்தில கிடைக்ககூடிய கோப்புகள், சரியா வராத படங்கள் ன்னு யோசிச்சா பலதும் கிடைக்கும். இதை எல்லாம் நீக்கிடலாம்.
இப்பதான் பிரச்சினையே. எது அதிக இடம் பிடிச்சுகிட்டு இருக்குன்னு தெரிஞ்சா அது வேணுமா இல்லைன்னு தீர்மானம் செய்து நீக்கிடலாம். எப்படி கண்டு பிடிக்கிறது? அட, இது தெரியாம ப்லாக் எழுத வந்துட்டியா? விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் திறந்து பார்க்க வேன்டியதுதான் ன்னு சுலபமா சொல்லிடலாம். பாரும் பாரும் திறந்துப்பாரும்! தனிக்கோப்பா இருக்கறது எல்லாம் பிரச்சினை இல்லை. என்ன அளவுன்னு தெரிஞ்சுடும். அதுவே ஒரு அடைவா -போல்டரா- இருந்தா? போல்டரை வலது சொடுக்கு சொடுக்கி அதோட ப்ராபர்டீஸ் பாத்து அளவை கண்டுபிடிக்கலாம். இல்லை ஒவ்வொன்னா திறந்து உள்ளே என்ன அளவு கோப்புன்னு பாத்து அது வேணுமா வேணாமா... தாவு தீந்து போயிடும்.

From tree size

ஆனா நாம் யாரு? தொண்டுகிழங்களுக்கு கணினி படிக்கறவங்க இல்லே? நாம அப்படி எல்லாம் க்‌ஷ்டப்பட மாட்டோம். ட்ரீ சைஸ் மென்பொருளை இங்கே போய் தரவிறக்கி நிறுவி இருப்போம். 2.8 எம்பி தானே!
அதனால விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் லே வலது சொடுக்கு சொடுக்கி ட்ரீ சைஸ் ன்னு தேர்ந்தெடுத்தா...

From tree size

From tree size
ஒவ்வொரு அடைவும் என்ன அளவுன்னு காட்டிடும். அப்படியே ஒவ்வொன்னையும் அம்புக்குறி மேலே சொடுக்க துணை அடைவுகளோ இல்லை கோப்புகளோ என்ன அளவுன்னு காட்டிடும்.
இப்ப சுலபமா எது அதிக அளவுன்னு பாத்து நீக்கலாமான்னு முடிவு செய்யலாம்.

Tuesday, March 8, 2011

அச்சச்சோ! படங்கள் காணாம போச்சு!

அலோ! எல்லாரும் எப்படி இருக்கீங்க?
இந்தப்பக்கம் வரது கொஞ்ச நாள்...ஹிஹீ வாரமாவே கஷ்டமா போச்சு!
என் மேசை கணினியிலே லீனக்ஸ் திருப்பி நிறுவப்போய் தப்பான பார்டிஷன்லே நிறுவிட்டேன். பழசுல இருந்த டேட்டா எல்லாம் கோவந்தாவான்னு சோகப்பட்டு அப்ப்றம் பல பக்கங்களை படிச்சு தகால் எல்லாம் ரெகவர் பண்ணேன். நல்ல காலமா பேக் அப் நிறைய எடுத்து வெச்சு இருந்ததால பாதிப்பு அதிகம் இல்லை. மடி கணினியும் அடுத்தாப்பல வந்தட்டு ராசா ஆகி.... ஹிஹி அதான் கரப்ட் ஆகிப்போச்சு! பிறகு எல்லாத்தையும் மீண்டும் நிறுவலாச்சு.
இப்ப அது தொடர்பான பதிவுகள் ரெண்டு பார்க்கபோறோம்!
இல்லை.நம்ம கணினி இப்படி ஏதாவது ஆச்சுன்னா என்ன செய்யறதுன்னு இந்த பதிவு இல்லை. அதுக்கு கொஞ்சம் விவரமான ஆசாமியை கூப்பிட்டு கிட்டே வெச்சுகிட்டு பாத்துக்கலாம். வயசான காலத்தில இதெல்லாம் வேற நமக்கு தேவையா?
முதலாவது நம்ம டிஜிட்டல் காமிராவிலேந்து படங்களை மீட்கறது!
வெளியூர் போனோம்; நெறைய படங்கள் எடுத்தோம். அப்புறம் எல்லாத்தையும் கணினிக்கு மாத்தினோம்.கார்டை அழிச்சுட்டோம். பிறகு படங்களை பாக்கலாம்ன்னு பாத்தா அதிலே இருந்த படங்கள் எல்லாம் காணலை! இல்லை புதுசா எடுத்ததெல்லாம் காணலை; இல்லை காமிரா ஏதோ பிரச்சினை அதிலேந்து படங்கள் கணின்னிக்கு வரலை. இப்படி எல்லாம் சாதாரணமா ஆகாதுதான். ஆனா நமக்க்ன்னு அசாதரணமாதானே எல்லாம் நடக்கும்!
இந்த மாதிரி ஆகிற போது படங்களை திருப்பி பெறலாம்.
மெமெரி கார்டை பார்மாட் பண்ணிட்டேனே ந்னா பரவாயில்லை. அதுக்கு மேலே ஒண்ணும் படம் எடுத்து தரவு எழுதாம இருந்தா போதும். இதுக்கு இங்கே போய் தரவிறக்கி நிறுவுங்க.
சாதாரணமா இந்த மாதிரி தரவு மீட்கிற மென்பொருள் எல்லாம் இலவசம் இல்லை. அப்படி 'இலவசமா' கிடைக்கறதும் சிலகட்டுப்பாடுகளோடேயே இருக்கும். ஏன்னா இந்த டாடா ரெகவரி பெரிய பிசினஸ்!
இப்ப நான் கொடுத்த தொடுப்பு பயன்படுத்திப்பார்க்க இலவசம். 4 அடைவுகள் வரை படங்களை மீட்கலாம். அது இப்ப நமக்குப்போதும்.
எதுக்கும் முதல்ல இந்த பக்கம் போய் நம்ம காமிரா பேர் அந்த பட்டியல்லே இருக்கான்னு பாத்துடுங்க!
ம்ம்ம் கூட நமக்கு ஒரு கார்ட் ரீடர் வேண்டி இருக்கலாம். வேணுமான்னு அந்த பகக்த்திலே சொல்லி இருப்பாங்க. காமிராவிலேந்து நேரடியா படங்களை தரவிறக்கற பழக்கம் இருந்தா இது இல்லாம இருக்கலாம். யார்கிட்டேயானா இதை கொஞ்சம் இரவல் வாங்கிக்கலாம். வா, உனக்கு எப்படி இழந்த படங்களை மீட்கிறதுன்னு சொல்லித்தரேன்னு ஆசை காட்டி பார்க்கலாம்!
கார்ட் ரீடரை இணைங்க! அதில உங்க காமிரா கார்டை சொருகுங்க. மென்பொருளை துவக்குங்க.
முதல் கட்டம் மேல் பொட்டியை - இமேஜ் ரெகவரி ப்ரீ- தட்டுங்க. அடுத்த படியிலே உங்க காமிரா கார்ட் எதுன்னு காட்டுங்க!  அது ஜம்முன்னு எல்லா படங்களையும் பட்டியல் போடும். தேவையான படங்களொட பொட்டியில எல்லாம் மார்க் பண்ணுங்க. எதுன்னு தெரியலைன்னா எல்லாத்தையும் குறிங்க. அடுத்து நெக்ஸ்ட் பட்டன தட்டினா எங்கே சேமிக்கணும்ன்னு கேட்டு அங்கே சேமிச்சுடும். அவ்வளோதான்! எவ்வளோ ஈஸி பாருங்க!
நல்லா நினைவு வெச்சுக்கோங்க. பார்மாட் பண்ணாலும் பரவாயில்லை. அதுக்கு மேலே படங்கள் எடுத்திருந்தா மீட்கிற வாய்ப்பு குறைவு!



Thursday, March 3, 2011

கை வண்ணம்!

ம்ம்ம் அப்புறம் என்ன? நம்ம கலைவண்ணத்தை காட்டலாமா? சின்ன வயசில பாட்டு பாடினதையும் சுவரெல்லாம் படம் வரஞ்சதையும் ஞாபக படுத்திக்கலாம். இப்ப நினைச்சாலும் அப்படி செய்ய முடியுமா? போர் பீபில் வில் லாஃப்.
கவலையே வேணாம்.
பெயின்ட் ன்னு ஒரு ப்ரோக்கிராம் விண்டோசோட இலவசமா கிடைக்குது. நம்ம தேவைக்கு இது போதும். என்ன பெரிய ரவி வர்மாவா நாம?
ஸ்டார்ட்> ஆக்சசரீஸ் ல இந்த பெய்ன்ட் நிரல் இருக்கு. அத திறக்கலாமா?
இப்படி ஒரு இடைமுகம் அதில.

From paint

இது என் விண்டோஸ் 7 ல இருக்கிற நிரல். எக்ஸ் பியை விட கொஞ்சம்
இன்னும் நல்லா இருக்குன்னு கேள்வி!

வரிசையா பார்க்கலாம்.
முதல்ல கிளிப்போர்டு. அது கீழே ஒரு அம்புக்குறி இருக்கா? இது எதுக்குன்னு நமக்குத்தான் தெரியுமே! அத சொடுக்கினா மெனு விரியும். ஆனா அது இப்ப தேவையில்லை. ஏதாவது ஒரு படத்தை வலையிலோ, இல்லை நம்ம திரையை படம் பிடிக்க செலக்ட் காபியோ அல்லது பிரிண்ட் ஸ்க்ரீன் கட்டளையோ நிறைவேத்திய பிறகு எதிலாவது அந்த படத்தை ஓட்டனுமே? அந்த படம் நம்ம கணிணியில தற்காலிக நினைவகத்தில இருக்கு. இதுக்கு க்ளிப்போர்ட் ன்னு பேரு. இதிலேந்து படத்தை எதிலாவது ஒட்டணும். இந்த பெயிண்ட் ஐ திறந்து அதிலே ஓட்டலாம். கீழே தெரியற வெள்ளை இடத்தில சொடுக்கி கண்ட்ரோல் வி அல்லது வலது சொடுக்கு பேஸ்ட்; அல்லது மேலே பாத்த கிளிப்போர்ட் சொடுக்கி அதிலே பேஸ்ட் கட்டளை. இதிலே எதை பண்ணாலும் சரிதான்.

அடுத்து இமேஜ். படத்தை மறு அளவாக்கவோ உல்டா பண்ணி போடவோ, பக்கவாட்டில திருப்பவோ பயன்படும். அதே சமயம் படத்தில குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுக்கவும் பயன்படும். தேர்ந்தெடுக்கிறதுல நீள்சதுரம் அல்லது கட்டுப்பாடில்லாமல் தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு.

அடுத்து டூல்ஸ்.

இதில எழுத பென்சில் உண்டு! ரப்பர் உண்டு! தப்பா வரைஞ்ச்சுட்டா அழிச்சிடலாம்! இல்லை ஒரு பரப்பை அழிகிறதாலேயே படம் வரையலாம்.

ஒரு பக்கெட் உண்டு. இதில நமக்கு வேண்டிய வண்ணத்தை ரொப்பி ஒரு வட்டம் கட்டம் உள்ளே ஊத்தி நிரப்பலாம்!

எழுத்து கருவி உண்டு. படம் வரைந்து பாகங்களை குறின்னு சொன்னா பாகங்களுக்கு பேர் எழுதலாம்.

ஒரு கலர்பிக்கர். பார்க்க இங்க்க்பில்லர் மாதிரி. வேற படத்தில பாத்து அட, இந்த கலர் ரொம்ப நல்லா இருக்கேன்னு நினைச்சா அந்த கலரை சாம்பிள் எடுத்து பயன்படுத்தலாம்.

ஒரு பூதக்கண்ணாடியும் உண்டு. குறிப்பிட்ட இடத்தை பெரிசாக்கி வரையும் போது இன்னும் நல்லா வரையலாம்.

அடுத்த பொட்டி பிரஷ். நிறைய வகைகள் இருக்கு. கலர் பென்சில் மாதிரி, ஹைலைட் , ஏர் பிரஷ், அழகா எழுத பயன்படும் காலிக்ராபி பிரஷ் , க்ரேயான், மார்க்கர், ஆயில் பெய்ந்டிங், வாட்டர் கலர் பிரஷ் இப்படி பல வகை.

அடுத்து ஷேப்ஸ். பலவித வடிவங்கள். ஏதேனும் ஒண்ணை தேர்ந்தெடுத்து அப்புறம் கான்வாஸ் ல தீத்திப்பாருங்க! எப்படி பயன்படுத்தறதுன்னு புரிஞ்சுடும்.

அடுத்து கோட்டின் தடிமன்.

அடுத்து பின்புல முன்புலத்துக்கு ரெண்டு கலர். அடுத்து தொட்டுக்க நிறைய கலர்.. ரைட் போதும். இனிமே இஷ்டத்துக்கு எதையாவது தொட்டு கோடு வளைவு பெட்டி ... வரைஞ்சு அசத்துங்க. (ஏதாவது தப்பா வரைஞ்ச்சுட்டா கண்ட்ரோல இஜட் , அன் டூ செய்யலாம். ) பொட்டி வரைஞ்சு அத உல்டா பண்ணுங்க. ரப்பரால அழியுங்க. பொட்டில கலர் நிரப்புங்க. ஜாலியா பூந்து வெளையாடுங்க.

எனக்கு அனுப்புங்க, பிரசுரிக்கலாம்!

From paint

Monday, February 21, 2011

சிடியை இப்ப அந்த ட்ரேல வைக்கணும். அது சரி எந்தப்பக்கம் மேலே எது கீழே?
ப்ரொபஷனல் ரெகார்டிங்க் ன்னா ஒரு பக்கம் படம் போட்டு யாரோட என்ன சிடின்னு எல்லாம் கலர் கலரா எழுதியிருக்கும். இந்தப்பக்கம் மேலே இருக்கணும். வேற யாரும் ரெகார்ட் பண்ணி கொடுத்ததுன்னா இப்படி இல்லாம போகலாம். ம்ம்ம்ம். ஒரு பக்கம் கண்ணாடி மாதிரி பிரதிபலிக்கும் இல்லையா? அது கீழே போகணும்......

வட்டை - நல்லா கவனியுங்க, வடை இல்லை, வட்டை- அது சிடியோ, டிவிடியோ - உள்ளிட்டதும் விண்டோஸ் "நீ பாட்டுக்கு உள்ள போட்டு இருக்கியே, இத வெச்சுகிட்டு என்ன செய்ய?” ன்னு கேக்கும். போனாப்போறதுன்னு அதுவே தேர்வுகளைத்தரும். விண்டோஸ் மீடியா ப்லேயர், விஎல்சி துவக்கவா இல்லை விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் ல கோப்புகளை பாக்கணுமா ன்னு கேக்கும். கீழே ஒரு சின்ன பொட்டி போட்டு இதயே எப்பவும் பண்ணு ன்னும் ஒரு தேர்வு இருக்கும். அதை சொடுக்கி டிக் பண்ணா இனிமே இதேபோல வட்டை பார்த்தா அது இப்ப தேர்ந்தெடுக்கற காரியத்தையே செய்யும்.
சாதாரணமா ஆடியோ வட்டுக்களை ஆட்டோ ப்ளே ல இசைக்கலாம். வரிசையா ஒவ்வொரு பாட்டையும் அது இசைத்துக் கொண்டே போகும். எதையாவது ஸ்கிப் பண்ணி அடுத்ததை கேட்கணும்ன்னா நெக்ஸ்ட் அழுத்தினா போதும். இல்லை பாடல்கள் பட்டியலை பாத்து தேர்ந்தெடுக்கலாம்.
எவ்வளவு நல்லா இசை கேட்கும் என்கிறது வட்டையும் பொறுத்தது; கணினியில கேட்க இருக்கிற சாதனத்தையும் பொறுத்தது. என் மடி கணினி வாங்கினப்ப கூடவே 300 ரூபாய்க்கு நாய்ஸ் கேன்சலேஷன் ஹெட்போன் சேத்து வாங்கினேன். கேட்கிற ஒலியிலே எக்கச்சக்க வித்தியாசம்!
இசை கேட்க வட்டு இல்லாம நேரடியா கணினியிலிருந்தோ, இல்லை ஒரு யூஎஸ்பி ஸ்டிக்கில் இருந்தோ, இல்லை வேற இசை சாதனத்தை லைன் இன் லே பொருத்தியோ கேட்கலாம்.
எல்லாம் சரி, சத்தம்தான் வரலைன்னா .... ஹெட்போன்ஸ் இணைச்சு இருக்கான்னு பாருங்க. அதுதான் வழக்கமான பிரச்சினை! மூக்கு கண்ணாடியை போட்டுகிட்டே அது எங்கன்னு நாம தேடறா மாதிரி -உஷ், அடக்கி வாசிங்க! சரி சரி.. -ஹெட்போன்ஸ் ஐ மாட்டிட்டு மேசை ஸ்பீகர்லே சத்தமில்லைன்னு குழம்புவோம். இல்லை ஹெட்போன்ஸ் ல இருக்கிற ஸ்விட்சை ஆப் பண்ணிட்டு சத்தமில்லைன்னு குழம்புவோம். சரி சரி! இதெல்லாம் சகஜம்தான். கணினி வந்தப்ப இருந்த செட்டிங்க் எல்லாம் மாத்தாத வரை பிரச்சினை இருக்கக்கூடாது.

Friday, February 18, 2011

இசை கேட்டால் புவி அசைந்தாடும்....

அடுத்து நாம பார்க்ககூடியது இசை.

கணினின்னா என்னன்னே தெரியாம இருந்து, பேரன் தாத்தா உனக்கு ம்யூசிக் ரொம்ப பிடிக்குமே, இந்தான்னு... ஐபாட் கொடுப்பான்னு பாத்தா மடி கணினி வாங்கி கொடுத்துட்டான். சரி இதை எப்படி பயன்படுத்தறதுன்னு பாக்கப்போய் கணினி கத்துண்டவங்க உண்டு.
சரி சரி எனக்கு இசை ரொம்ப பிடிக்கும். கணினியை வெச்சுகிட்டு இசை கேட்க சொல்லித்தாங்க ன்னு சொன்னா...
ஓகே. ரொம்ப ஒண்ணும் பெரிய விஷயமில்லை.
விண்டொஸ்லே முன் பதிவா வரது விண்டோஸ் மீடியா ப்ளேயர். இதைத்தான் பயன்படுத்தனும்ன்னு ஒண்ணுமில்லே!
இணையத்துல பாத்தா ஆயிரத்தெட்டு இசைப்பிகள் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்சது வி.எல்.சி ப்லேயர். இது வெறும் இசைப்பி மட்டும் இல்லை. விடியோவும் அதங்க சினிமாப்படம் கூட - காட்டும். ரியல் பார்மாட் தவிர மத்த எல்லாத்தையும் இசைக்கும்! சிடி, டிவிடி, எஸ்விசிடி, ஆடியோ சிடி ஏதானாலும் சரி. அப்புறம் ஊடக ஒழுங்கு - அதாங்க மீடியா பார்மாட் எதானாலும் -MPEG (ES,PS,TS,PVA,MP3)AVI ASF / WMV / WMA MP4 / MOV / 3GP OGG / OGM / Annodex Matroska (MKV) WAV (incuding DTS) Raw Audio: DTS, AAC, AC3/A52 Raw DV FLAC FLV (Flash) MXF Nut Standard MIDI / SMF Creative™ Voice- இத்தனையும் இயக்கும்.

அடிப்படையிலே விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் லே பாக்கிற எந்த இசை கோப்பை சொடுக்கினாலும் அது தானே திறந்து இசைக்க ஆரம்பிச்சுடும். எது அதை இசைக்கும்ன்னு கேட்டா..... சாதாரணமா எதை கடைசியா நிறுவினோமோ அந்த நிரல்தான் இசைக்கும். ஏன்னா நிறுவும்போது நாம பாட்டுக்கு சரி சரி ன்னு பூம் பூம் மாட்டுக்காரனோட மாடு மாதிரி சொல்லிண்டு போயிருப்போம். எல்லா நிரலுமே கேட்கிறது - 'இதை முன்னிருப்பு இசைப்பியா வெச்சுக்கலாமா?"  இதுக்கும் சரின்னு சொல்லி இருப்போம். அதானே அதுக்கும் வேண்டியது?

கொஞ்சம் சீரியஸா திரச சார் மாதிரி இருக்கிறவங்க இசை கேட்கிறதுன்னா கொஞ்சம் ஆர்கனைஸ் பண்ணி வெச்சுக்கணும்.
இசை உங்க கணினியிலே இருக்கலாம். இல்லை டிவிடி சிடி லே இருக்கலாம். டிவிடி சிடின்னா ஒண்ணும் பேச்சே இல்லை. யாரோட இசை/ எந்த சிடி கேட்கணுமோ அதை கண்டு பிடிச்சு வெச்சுக்குங்க. இதை டிவிடி ப்ளேயர்லே போடணும். எப்படி போடறது? முதல்ல டிவிடி ப்ளேயரோட ட்ரேயை திறக்கணும். அதுக்கு ஒரு பட்டன் இருக்கு. கணினியிலே இருக்கிற ப்ளேயர்லேயே அதுவும் இருக்கும். படத்தை பாருங்க.

From தொண்டுகிழங்களுக்கு கணினி

அந்த பொத்தானை அமுக்கினதும் ட்ரே தானே வெளியே வரும். இப்ப டிவிடி/ சிடியை மாஹா விஷ்ணுவோட சக்ராயுதம் மாதிரி வெளியே எடுக்கணும். ஹிஹிஹி! அதாவது சிடி நடுவிலே இருக்கிற ஓட்டையில நம்ம விரலை நுழைச்சு வெளியே எடுக்கணும். இது ஒரு பாக்கெட்ல வர சிடி க்கு. அதுவே ஒரு சின்ன பெட்டியிலே வர சிடின்னா பெட்டியை திறந்ததும் சிடியோட நடு ஓட்டை ஒரு நாப்லே பொருத்தி இருக்கிறது தெரியும். வழக்கமா இந்த நாப் அழுத்தறா மாதிரி இருக்கும். அழுத்தினா சிடி ரிலீஸ் ஆகிடும். அப்புறம் மஹா விஷ்ணு...

ஏன் இப்படி பிடிக்கச்சொல்லறேன்னா..

நம்ம கை எப்பவும் சுத்தம்.... ஹிஹீஹி அந்த சுத்தம் இல்லை, சாதா சுத்தம்... ஆ இருக்கும்ன்னு சொல்ல முடியாது. ஏதேனும் எண்ணை பசை, அழுக்கு எல்லாம் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அது சிடி மேலே பட்டு ஒட்டிக்கொண்டுதுன்னா சென்ஸார் அந்த இடத்திலே தடத்தை படிக்க கஷ்டப்படும். அதனால சிடியை சக்ராயுதாம் மாதிரியோ அல்லது விளிம்புலேயோ (படத்தை பாருங்க) பிடிச்சுக்கணும்.
சிடியை இப்ப அந்த ட்ரேல வைக்கணும். அது சரி எந்தப்பக்கம் மேலே எது கீழே?
ப்ரொபஷனல் ரெகார்டிங்க் ன்னா ஒரு பக்கம் படம் போட்டு யாரோட என்ன சிடின்னு எல்லாம் கலர் கலரா எழுதியிருக்கும். இந்தப்பக்கம் மேலே இருக்கணும். வேற யாரும் ரெகார்ட் பண்ணி கொடுத்ததுன்னா இப்படி இல்லாம போகலாம். ம்ம்ம்ம். ஒரு பக்கம்கண்ணாடி மாதிரி பிரதிபலிக்கும் இல்லையா? அது கீழே போகணும். சரியா?

-தொடரும்....

Thursday, February 17, 2011

ஜாக்கிரதை-2

போன பதிவிலே பாதுகாப்பு சமாசாரங்கள் பாத்தோம். பாஸ்வேர்ட் கேட்கிற தளங்களை நம்பாதீங்கன்னு சொன்னோம். இப்ப இன்னும் சில விஷயங்களை பார்க்கலாம்.
சரி இப்படி பாஸ்வேர்டை திருடி என்ன செய்வாங்க? பொதுவா நம்ம மெய்ல் அட்ரஸ் புத்தகத்திலே இருக்கிற மெய்ல் ஐடி எல்லாம் திருடுவாங்க. நமக்கு வந்த மெய்ல்களை நீக்கலாம்; மெய்ல்களை படிச்சு நமக்கு தெரிஞ்ச ராஜாங்க (அல்லது ராசாங்க?) ரகசியங்களை தெரிஞ்சுக்கலாம் என்றாலும் அப்படி எல்லாம் செய்யறதில்லை. ஏன்னா அதில அவங்களுக்கு ஆர்வம் இல்லை. வேண்டியதெல்லாம் மெய்ல் ஐடி. சரி இத வெச்சுக்கிட்டு என்ன செய்யறது? அதை வித்துடுவாங்க. வாங்கறவங்க என்ன செய்வாங்க?
நமக்கு திடீர்ன்னு ஒரு மெய்ல் வரும். நான் உகாண்டா நாட்டிலே இருக்கேன். என் வீட்டுக்காரர் ராணுவ தளபதி. நிறைய சொத்து சேத்து வெச்சிருந்தாரு. சுமார் 50 மில்லியன் டாலர் வெளிநாட்டு வங்கியில இருக்கு. இப்ப அவர போட்டுத்தள்ளிட்டாங்க. வெளி நாட்டில வங்கி கணக்குல இருக்கிற பணம் சமாசாரம் எனக்கு மட்டுமே தெரியும். நான் வெளிநாடி போக முடியாத நிலைமையிலே இருக்கேன். நீங்க எனக்கு உதவினா இந்த பணத்தை வெளியே எடுத்துடலாம். இந்த உதவியை என் ஜன்மம் முழுசும் மறக்க மாட்டேன். உங்களுக்கு இதுல 25% தரேன். தயவு செஞ்சு உதவுங்க!
இதை நம்பி அவங்களை தொடர்பு கொண்டா முதல்ல பலான வங்கியில ஒரு ஜாய்ன்ட் கணக்கு ஆரம்பிச்சு இத்தனை ரூபா அதில போடுங்க, இது சட்ட நிபுணருக்கு கொடுக்கணும். அவர் மீதி வேலையை பாத்து கணக்கை க்ளியர் செஞ்சதும் இந்த பணத்தை திருப்பி கொடுத்துடறேன். அப்புறம் நாம பணத்தை பகிர்ந்துக்கலாம் ன்னு மெய்ல் வரும். இன்னும் இதை நம்பி அப்படி செஞ்சா டெபாசிட் பண்ண அடுத்த நிமிஷம் பணம் காணாம போயிடும்!
இன்னும் ஒண்ணு: நான் பலான வங்கி மேலாளர். இன்னார் எங்க வங்கியில கணக்கு வெச்சு இருந்தார். மில்லியன் கணக்குல பணம் சேத்து மண்டையப் போட்டுட்டார். இவருக்கு வாரிசு இல்லை. அதனால் நாம பணத்தை லவட்டிடலாம். நீங்க இந்த வங்கில ஒரு கணக்கு துவங்கி எங்கிட்டே சொன்னதும் இவரோட பணத்த நான் ட்ரான்ஸ்பர் பண்ணிடறேன்....... இதுவும் கோவிந்தாதான்!
இதே போல மில்லியன் கணக்குல பணம் சேத்து அவர் விமான விபத்துல மண்டையை போட்டுட்டார். விபத்து விவரம் இங்க வலைப்பக்கத்தில பாருங்க. (நிஜமாவே ஒரு விபத்து பத்தி செய்தி அங்கே இருக்கும்.) இப்படி க்ளையன்ட் கதைக்கூட வரும். இதே கதை வங்கியா இல்லாம் இன்ஸ்யூரன்ஸ் கம்பனியாக்கூட இருக்கலாம்.
இன்னொரு டச்சிங் அஞ்சல் வரும். நான் புத்து நோயால பாதிக்கப்பட்டு இருக்கேன். சாகப்போறேன். போற இடத்துக்கு புண்ணியம் தேடிக்க உனக்கு காசு கொடுக்கப்போறேன்.... ஹிஹிஹி!
நம்ம நண்பர்கிட்டேந்து வராப்போல ஒரு அஞ்சல் வரும். நான் லண்டன்லே இருக்கேன். வந்த இடத்தில என் பர்ஸ், பாஸ்போர்ட் எல்லாம் களவு போச்சு. அடுத்த வேளை சாப்பாட்டுக்குக்கூட காசு இல்லை. உடனே என் நண்பர் கணக்குக்கு கொஞ்சம் பணம் அனுப்புங்க. திரும்பி வந்ததும் உங்களுக்கு கொடுத்துடறேன். நேத்துதானே ஆதம்பாக்கத்துல பாத்தேன் இவர் எங்கேடா அதுக்குள்ள லண்டன் போனாரு ன்னு தோணித்துன்னா நல்லது. இல்லை பணத்தை அனுப்பிட்டு இவன் திருப்பித்தரலை பார் நன்னி கெட்டவன்ன்னு திட்டிகிட்டு உக்காந்து இருக்கலாம்.
மைக்ரோசாப்ட்/ கூகுள்/ ப்ரிட்டிஷ் டெலிகாம் லாட்டரில உங்களுக்கு பிரைஸ் அடிச்சு இருக்கு; இத வாங்கிக்க கீழ் கண்ட படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்க பேர், செக்ஸ், மெய்ல் ஐடி (ஏன்யா இப்பதானே மெய்ல் அனுப்பினே உனக்கு எதுக்கு மெய்ல் ஐடின்னு கேக்கப்படாது! சும்மா ரேண்டமா மெய்ல் ஐடி போட்டு ஜிமெய்ல் ன்னு போடுவாங்க. போயிடுத்துன்னா அது உண்மையான ஐடி. இல்லைன்னா இல்லை. பதில் வேற வந்தா இன்னும் விசேஷம். அவ்வளோதான்!)
இதப்போலா ஆயிரக்கணக்குல கதைகள் இருக்கு. உங்க ஜிமெய்ல் கணக்குல ஸ்பாம் அடைவை திறந்து பாருங்க. இன்னும் வகை வகையா பார்க்கலாம். என்னிக்காவது ரொம்ப போர் அடிச்சா இதை திறந்து சுவையான கதைகளை படிக்கலாம். எல்லாம் வயாக்ரா, பென்டர்மின், ரோலக்ஸ் வாட்ச் பத்தின அஞ்சல்கள் கூட இருக்கும். அங்க இன்னும்ம் 'டியர் உன் ப்ரொபைலை கூகுள்ள பாத்ததிலேந்து எனக்கு தூக்கமே வரலை, உன் நினைப்பாவே உருகிகிட்டு இருக்கேன். என்னை தொடர்பு கொள்ளேன்' வகை மெய்ல்களும் இருக்கும்.
அட இதெல்லாம் எங்கேந்து வந்தது?
கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கிறவங்க இப்படி மெய்ல் பார்த்ததும் அங்கே ரிபோர்ட் ஸ்பாம் ன்னு இருக்கிற பட்டனை தட்டுவாங்க. இதை கூகுள் சேகரிச்சு வெச்சுக்கும். ஓரளவு இதே போல ரிபோர்ட் வந்ததும் அது ஆராய்ஞ்சு ஒரு பில்டரை (filter) உருவாக்கும். மேலும் இதே போல வர மெய்ல் எல்லாத்தையும் வடிகட்டிடும். இப்படி ஸ்பாம் அனுப்பரவங்க உடனே மெய்ல் ஐ மாத்தி எழுதி அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சுடுவாங்க. திருப்பிப் பிடி, திருப்பி மாத்து... இந்த சடுகுடு தொடர் கதை.
அடுத்து இன்னும் பிரச்சினையான சமாசாரம் பார்க்கலாம்.

Thursday, February 10, 2011

ஜாக்கிரதை!

இன்னிக்கு ஒரு அஞ்சல் வந்தது. நண்பர் ஒருவர்கிட்டேந்து வந்த மாதிரி இருந்தது.

From spam

அட நம்ம நண்பர் நல்ல போட்டோ க்ராபராச்சே, நல்ல படங்கள் இருக்கும்ன்னு அங்கே போனேன். அந்த பக்கத்திலே என் மெய்ல் ஐடி போட்டு பதிவு செஞ்சுக்குங்கன்னு சொல்லித்து. பாஸ்வேர்டுக்கு ஒரு பெட்டி, கூடுதலா விவரம் நான் ஆணா பெண்ணா, கூடுதலா ஐ அக்ரீ டு ஆல் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் ன்னு ஒரு செக் பாக்ஸ். அவ்வளோதான். என்ன டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ? வழக்கமான ப்ளா ப்ளாதான். சரின்னு இதெல்லாம் நிரப்பி உள்ளே போனேன். உங்களைப்பத்தி இன்னும் கொஞ்சம் விஅவரங்கள் கொடுங்கன்னு சொல்லி வழக்கமான முதல் பேரு, ரெண்டாம் பேரு, பொறந்த நாள் ப்ளா ப்ளா எல்லாம் கேட்டுது. கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஹும், சரி பார்க்கலாம்ன்னு கொடுத்த பிறகு உங்க ஜிமெய்ல் கணக்கிலே இன்னும் யார் யார் எங்க மெம்பர்ன்னு சொல்லவா? கீழே இருக்கீறதை நிரப்புங்கன்னு சொல்லித்து. கீழே என் ஜிமெய்ல் கணக்கு பாஸ்வேர்ட் உள்ளிடச்சொல்லித்து.
ஹிஹிஹிஹி, ரொம்ப சாரி, வேற ஆளைப்பாருன்னு பக்கத்தை மூடிட்டு வெளியே வந்துட்டேன்.
திருப்பி நண்பரோட மெய்ல் க்குப்போய் show detailsன்னு சொல்லி, இப்ப அதை முழுமையா பார்த்தேன். அது அவரோட ஐடி லேந்து வரலை.

From spam

அவர் பேரைப்போட்டு வலைத்தள ஐடிலேந்து வந்திருக்கு. (படத்திலே மெய்ல் ஐடி ஐ அழிச்சு இருக்கேன்!) இப்படி வரது புதுசு இல்லைன்னாலும் அஞ்சல் கணக்கு பாஸ்வேர்ட் கேட்டதுதான் ரொம்பவே மோசம்!

இது போல வலைப்பக்கம் ஏதேனும் உங்க அந்தரங்க விவரம் கேட்டா கொடுக்காதீங்க. உள்ளே நுழைஞ்சு உங்களோட தகவல் அத்தனையும் திருடிடுவாங்க.
இதைபோல எச்சரிக்கையா இருக்க வேண்டிய சமாசாரம் அடுத்த பதிவிலே.

Monday, January 17, 2011

இன்னும் ஸ்கைபி...

என்ன காணும் பொங்கலுக்கு கொ.பே./கொ.பே கூட எல்லாம் அரட்டை அடிச்சீங்களா?

கீழே இருக்கிற பதிவில யாரையும் நினைச்சுகிட்டு எழுதலைன்னு ஒரு டிஸ்கி முதல்ல போட்டுக்கிறேன்.

ஆரம்பத்திலே கொஞ்சம் கண்ணை கட்டி காட்டில விட்டாப்போல இருக்கும்தான். பிரச்சினையை சரி பண்ண இரண்டு பக்கமும் வழி இருக்கிறதால கொஞ்சம் சௌகரியம். விடியோ சாட் வரலைன்னா அப்படியே கீழே டெக்ஸ்ட் சாட் ல என்னப்பா செய்யணும்ன்னு கேட்டு சரி செஞ்சுக்கலாம். ஏதோ குழப்பம் விடியோ இல்லாம போயிடுத்து, ஆடியோ இல்லாம போயிடுத்துன்னா சங்கரி பாப்பாவை கூப்பிடவும் முடியலைன்னா பேசாம கால் ஐ துண்டிச்சுடலாம். அப்புறமா அவங்க திருப்பி கூப்பிடலாம் இல்லை நாமே கூப்பிடலாம்.

சாதாரணமா பிரச்சினை இருக்கறதில்லை. ஆடியோ அமைப்பு வேணா சரி செய்ய தேவை இருக்கலாம்.ஸ்பீக்கர், ஹெட்போன் இவற்றில சரியான தேர்வு இல்லாம போகிறதே வழக்கமா பிரச்சினை.

லாப்டாப்பிலே ஸ்கைபி ரொம்ப சௌகரியம். கூட வயர்லெஸ் மோடம் இருந்துடுத்துன்னா இன்னும் சௌகரியம். லாப்டாப்பயே இடத்துக்கு இடம் கொண்டு போய் படுத்த படுக்கையா இருக்கிற நம்ம (தொ.கி க்கு) அப்பா அம்மா வை "பார் உன் எள்ளு பேத்தியை" ன்னு காட்டலாம். அது பாட்டீ ன்னு கொஞ்சறதை கேட்டு அப்படியே உருகி போயிடுவாங்க. இட் இஸ் வொர்த் இட்!
வீட்டிலே வெச்சு இருக்கிற கொலுவை காட்டலாம். அவங்களும் அங்கிருந்து பாட்டு பாடி ஈ சுண்டல் வாங்கிக்கலாம். வீட்டு கன்னுக்குட்டி, நாய்குட்டி பூனைக்குட்டி எல்லாம் பாத்து கொஞ்சலாம். அட மல்லிச்செடி பூத்துடுத்தேன்னு ஆச்சரியப்படலாம். எனக்கு தெரிஞ்சு சிலர் விடிகாலை நெட் சார்ஜ் ஃப்ரீ நேரத்தில குழுவா சாஸ்திரப்பாடம் கேட்டுண்டு இருந்தாங்க. ஆமாம் க்ரூப் சாட்டிங்க் கூட முடியும்.

ஆரம்பத்திலே சுவாரசியமா இருந்து அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அலுத்து போயிடலாம். என்னடா இந்த கிழம் வந்து அடிக்கடி தொந்திரவு பண்ணறதுன்னு கொ.பே க்கள் நினைக்கலாம். திடீர்ன்னு பாத்தா நாம ஸ்கைபிலே லாக் பண்ணா அவங்க பேர் எதிரே ஒரு விளக்கும் வராது. அவங்க இணையத்திலே இல்லைன்னு அர்த்தமில்லே. ஏன் ஸ்கைபியிலே இல்லேன்னு கூட அர்த்தம் இல்லை. அவங்க ஒளிஞ்சுண்டு இருக்காங்கன்னு அர்த்தம். நாம விடுவோமா! அப்ப கூட அவங்க பேர் மேலே சொடுக்கி ஒரு சாளரத்தை திறந்து ஹலோ ஒளிஞ்சுண்டு இருக்கயான்னு கேப்போம்! ஹும், யாருன்னு நினைச்சே!

ஸ்கைபியிலே நாம நம்ம நிலையை காட்டறதுக்கு வசதி இருக்கு.  எல்லாம் பச்சை - ஓகே அரட்டைக்கு தயார். அதுல சிவப்பு வட்டம் - பிஸியா இருக்கேன், அப்புறம் பேசலாம். இந்த பச்சையிலேயே இன்னும் சில நிலைகள் இருக்கு. அது கொஞ்சம் குழப்படிதான். ஸ்கைபிமீ ன்னா உங்க பேரை தேடின யாரும் உங்களோட அரட்டை அடிக்கலாம். அவே என்கிறது கணினியை திறந்து வெச்சுட்டு டிபன் சாப்பிட போறவங்களுக்கு. இந்த நிலையில சாட், அழைப்பு எல்லாத்துக்கும் அறிவிப்பு வரும். நாட் அவைலபிள் ன்னா டிபன் சாப்பிட போன ஆசாமி அப்படியே எங்கேயோ போயிட்டார்ன்னு அர்த்தம். மத்தபடி இது அவே மாதிரிதான். என்ன வித்தியாசம்ன்னா ஸ்கைபி தானே இத்தனை நேரத்துக்கு அப்புறம் அவே ன்னு அமைச்சுடும். இன்னும் நேரம் போச்சுன்னா நாட் அவைலபிள் ன்னு சொல்லிடும். அவ்வளோதான்.




இதெல்லாம் இல்லாம இன்விசிபிள் ன்னு ஒரு தேர்வு இருக்கு. இதில இருக்கும்போது நாம ஒரு அரட்டையை துவக்கலாம். அது இணைப்பிலே இருக்கிற மத்தவங்களுக்கு நாம் இணைப்பிலே இருக்கிறதை காட்டாது. நாம் யாருக்கு செய்தி அனுப்பறோமோ அவங்களுக்கு மட்டும் போகும்.

இது அநியாயம்ன்னு தோணினா சில விதிகளை கடைப்பிடிக்கணும்.

சிவப்பு விளக்கா இருந்தா அவசரம்ன்னா ஒழிய அவங்களை அரட்டைக்கு கூப்பிடக்கூடாது. சந்தேகமா இருந்தா ஒரு அஞ்சல் அனுப்பி சாட் பண்ண நேரம் இருக்கான்னு தெரிஞ்சுக்கணும். இதெல்லாம் வலை நன்னடத்தைகள்.

Saturday, January 15, 2011

அலோ அலோ ..... ஸ்கைபி!

எல்லாருக்கும் இனிய போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், சக்கரை பொங்கல், வெண்பொங்கல், ரவா பொங்கல் .... ஹிஹிஹிஹி !!! வாழ்த்துகள்!
 
நாளைக்கு கனுப்பொங்கலை காணும் பொங்கலாக்கி நிறைய சின்ன பசங்க பெரியவங்க எல்லார்கிட்டேந்து பைசா கறந்துடுவாங்க இல்லையா?
அதுக்குத்தான் இந்த விசேஷ பதிவு.

உங்க கொள்ளு பேரன் பேத்தி லாப்டாப் வாங்கி வெச்சுக்கோ தாத்தான்னு கொடுத்தா இல்லையா? அந்த கொ.பே/கொ.பே வோட நாளைக்கு அரட்டை அடிக்கலாம். எங்கே அவ யூ.எஸ் லே இருக்கா, யார் போன் போட்டு பேசறது? நான் ரிடையர் ஆகி ரெண்டு மாமாங்கம் ஆச்சு ந்னு புலம்பாதீங்க. உங்களுக்காகவே இருக்கு ஸ்கைபி.

தேவையான  சாமான்கள் அரை கிலோ துவம் பருப்பு...ஆ! சாரி! எங்கம்மா அடிக்கடி பாக்கிற சமையல் குறிப்பு நினைவில எழுதிட்டேன்.ஹிஹிஹிஹி!
தேவையானது: கணினி, ஸ்பீக்கர்கள், மைக். (இல்லை ரெண்டுத்துக்கும் ஹெட்போன் கூட பயன்படுத்தலாம். தனித்தனியா இருந்தா உங்க மனைவி/ கணவரும் கேக்கலாம்)

முதல்ல வலையிலே இணைச்சுக்கணும். ப்ராட்பேன்ட் இல்லாம ஸ்கைபி விடியோ அரட்டை முடியாது.
ஸ்கைபி மென்பொருளை இங்கே போய் தரவிறக்கிக்கோங்க! இலவசம்தான். 
http://tinyurl.com/4p6dcv5

ஆச்சா? இன்ஸ்டாலர்தான் தரவிறங்கும். அதை ரெண்டு தரம் சொடுக்க அது வலைக்குபோய் சமத்தா வேண்டிய கோப்பெல்லாம் கொண்டுவந்து நம்ம கணினியிலே நிறுவிடும்.
அப்புறம் அதை திறக்க வேண்டியதுதான்.


ம்ம்ம்.. இன்னும் நாம ஒரு ஸ்கைபி கணக்கு துவக்கலை. அதனால் Skype Name கீழே இருக்கிற dont hae a skype name? ஐ சொடுக்குங்க. பிறகு வர படிவத்தை பூர்த்தி செய்யுங்க.


முதல்ல உங்க பேர். அப்புறம் ஸ்கைபில காட்ட வேண்டிய பேர். [இங்கே ஒண்ணு ரெண்டுன்னு எழுதக்கூடாது; ஸ்கைபில காட்டக்கூடிய உங்க பெயர், சரியா?]  பிறகு பாஸ்வேர்ட். அடுத்து அதை உறுதி செய்ய, திருப்பி அதே பாஸ்வேர்ட் ஐ டைப் பண்ணனும். ரெண்டு மூணு பாஸ்வேர்ட் எல்லாம் வெச்சிக்க முடியாது!

அப்புறம் end user license agreement ஐ சொடுக்கி படிச்சுட்டு அந்த சதுரமான பெட்டியில சொடுக்கி ஒரு டிக் மார்க் போடுங்க. அப்புறம் நெக்ஸ்ட் பட்டனை சொடுக்குங்க.





அடுத்து உங்க மின்னஞ்சல் ஐடில ஒண்னை இங்கே போடுங்க. உங்க பாஸ்வேர்ட் மறந்துபோச்சுன்னா இந்த ஐடிக்குத்தான் வேற அனுப்புவாங்க, அதனால ஒளஒளாட்டிக்கு ஐடி இங்கெ போட வேணாம். ஸ்பெஷல் ஆபர் எல்லாம் வேணாம். அதனால அடுத்த சதுர பெட்டியில டிக் இருந்தா அங்கே சொடுக்கி எடுத்துடுங்க.
பாருக்குள்ளே நம்ம நாடு எது ந்னு அடுத்து குறிச்சு கொடுத்து சைன் இன் ந்னு சொல்லிடலாம்.

அடுத்து வரது லாக் இன் ஸ்க்ரீன்; முன்னேயே பாத்தோம். ஸ்கைபி பெயர், கடவுச்சொல் எல்லாம் கொடுத்தா உள்ளே போக விடும்.
நம்ம கொ.பே இல்லை கொ.பே கொடுத்த அவங்களோட ஸ்கைபி பேரை கான்டாக்ட்ஸ் ல உள்ளிடணும். அது அவங்ககிட்டே போய் "பலான நபர் உங்களோட அரட்டை அடிக்க விரும்பரார்; அனுமதிக்கலாமா? போர் ஆசாமி போல இருக்கு! எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க. " ந்னு அனும் அதி கேக்கும். அவாங்க தப்பித்தவறி ஓக்கேன்னு சொல்லிட்டா அதுக்கு அப்புறம் நம்மை அரட்டைக்கு அனுமதிக்கும்.

இப்ப ச்சும்மா டைப் அடிக்கிற அரட்டை, போன் அரட்டை, விடியோ அரட்டை இதுல எதை வேணுமானா தேர்ந்தெடுத்து மேலே காரியத்தை கவனிக்கனும்.



விடியோ அரட்டை இடைமுகம் ஒண்ணு கீழே பாருங்க.


இடது பக்கம் நம்மோட கான்டாக்ட்ஸ் எல்லாம் பட்டியலா தெரியும். பச்ச விளக்கு எரிஞ்சா அவங்க லைன்ல இருக்காங்க. அரட்டைக்கு ஓகே ந்னு அர்த்தம். சிவப்புன்னா இல்லை. வேற செய்தியும் அங்கே தெரியலாம். நமக்கு இன்னிக்கு மாட்டின ஆசாமி பெயர் அங்க தெரிஞ்சா அதை சொடுக்குங்க. வலது பக்க பெட்டியிலே கால், விடியோ கால் ந்னு தேர்வு தெரியும். கீழே அரட்டை டைப் அடிக்க பெட்டி தெரியும். இந்த பெட்டில டைப் அடிச்சு "நான் வந்துட்டேன், விடியோ அரட்டைக்கு ரெடியா?" ன்னு கேட்டுகிட்டு விடியோ அரட்டை பட்டனை அமுக்கினா ஆச்சு. அவங்க பக்கத்து படம் பெரிசாவும், நம்ம பக்கத்து படம் சின்னதாவும் தெரியும். அப்புறம் என்ன பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருக்கலாம்! நடுவிலே கட் ஆகிட்டா சங்கரி பாப்பாவை கூப்பிடணும். அவ வந்து என்டர் பட்டனை தட்டுவா! திருப்பி கனேன்க்ட் ஆகிடும்! :-))))

ஸ்கைபி பத்தி விவரமா தெரிஞ்சுக்க கீழே இருக்கிற தொடுப்பை சொடுக்குங்க!

http://tinyurl.com/35ojc29

Friday, January 14, 2011

விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் இடைமுகம்

சரி அடுத்து வி.எ இடைமுகத்தை பார்க்கலாம். இதிலே வலது இடதா இரண்டு பலகம் இருக்கு. இடப்பக்கம் இருக்கிறதுல தேர்ந்தெடுத்ததை வலது பக்கம் பார்க்கலாம்......

அதாவது இடப்பக்கம் பாக்கிற அடைவுகளோட உள்ளடக்கங்கள் வலது பக்கம் தெரியும்.
எப்படி தெரியும் என்கிறதை வசதி போல மாத்திக்கலாம்.

தம்ப் நெய்ல்ஸ் என்கிறது படங்களை சின்ன படமா காட்டும். எந்த படத்தை திறக்கிறோம்ன்னு முன்னாலேயே தெரியும்.. எதையாவது தேடறோம், அதுக்கு படம் நம்பர்தான், img_10098, போல கொடுத்து இருக்குன்னா இது உதவும். ம்யூசிக் ஆல்பம் அடைவுன்னா கவர் கூட தெரியும்!

டைல்ஸ் என்கிறது பெரிய ஐகான்ஸ் ஐ பரப்பி வெச்சு இருக்கும். தகவல்கள் ஒண்ணும் பெரிசா தெரியாது. கோப்புகள் என்ன பயன்பாட்டுது என்கிறது தெரியும்.




ஐகான்ஸ் என்கிறது சின்ன டைல்ஸ் மாதிரி, விவரங்கள் ஒண்ணும் தெரியாது.

லிஸ்ட் என்கிறது நிறைய கோப்புகள் ஒரு அடைவில இருக்கிறப்ப நல்ல தேர்வு. ஒண்ணு கீழே ஒண்ணா எல்லா கோப்புகளும் பட்டியலிடப்படும்.

டீடெய்ல்ஸ் என்கறது என்ன பேர், என்ன அளவு, என்ன வகை, என்னிக்கு உருவாக்கினது ன்னு பல விவரங்களை காட்டும். என்ன என்ன விவரம் என்கிறதை நாம் அமைச்சுக்க முடியும். சாதாரணமா இதுவே நல்லது. விவரங்கள் ஒரு அட்டவணை மாதிரி வரும். ஒரு பத்தியோட தலையை சொடுக்கினா அந்த பத்தியில இருக்கிறபடி வரிசைப்படுத்தப்படும். உதாரணமா கோப்பு பேர் பத்தி தலையை சொடுக்கினா எழுத்துவாரியா, அதாவது a -z வாரியா பட்டியல் மாத்தி அமைக்கப்படும். அதை திருப்பியும் சொடுக்கினா தலைகீழ் எழுத்துவாரியா அதாவது z – a வரிசையில அமைக்கப்படும். இதே போலத்தான் மத்ததும். இப்படி இருக்கிறது பலவிதங்களில சௌகரியம். ஒரு பிடிஎஃப் கோப்பை தேடறோமா, வகையை சொடுக்கி வர பட்டியலிலே அதை சுலபமா தேடிக்கலாம். இன்னிக்கு காலை உருவாக்கின கோப்பு எங்கேன்னு தேட தேதியை சொடுக்கி தேடிக்கலாம்.

அடுத்து ஃபிலிம் ஸ்ட்ரிப். சின்ன படங்களா ஒரு வரிசையில காட்டப்படும். இதை மை பிக்சர்ஸ் அடைவிலே மட்டுமே பார்க்கலாம்.

அடிப்படையிலே வி.எ கோப்புகளை மேலாளத்தான் இல்லையா?
அப்ப கோப்புகளை பிரதி எடுக்கவும், வெட்டவும், ஒட்டவும், நீக்கவும், புதுசா அடைவுகள் உருவாக்கவும், நீகவும் முடியணும். ஆமாம் அதுக்குத்தான் இது
இருக்கு.

நமக்கு வெட்ட ஒட்டத்தான் முன்னேயே தெரியுமே! நோட்பேட் பத்தி பாக்கிறப்ப இதை பாத்தோமில்லையா? அதே குறுக்கு விசைகள் இங்கேயும் பயன்படும். ஒரு தரம் திருப்பி பார்க்கலாம்.

ctrl+C copy தேர்ந்தெடுக்கறதை பிரதி எடுக்க
ctrl+X cut தேர்ந்தெடுக்கறதை வெட்ட
ctrl+V paste ஒட்ட

பார்க்கிற இடத்திலே கண்ட்ரோல் விசையை அழுத்திகிட்டு தேவையான கோப்பு/ அடைவு ஏதாகிலும் ஒவ்வொண்ணா பொறுமையா தேர்ந்தெடுக்கலாம். இல்லை, பக்கத்து பக்கத்து உருப்படின்னா முதல் உருப்படியை தேர்ந்தெடுத்தபின்னே ஷிப்ட் விசையை அழுத்திக்கொண்டு கடைசி உருப்படியை தேர்ந்தெடுத்தா இடையிலே இருக்கிறதும் தேர்விலே சேர்ந்துடும். எல்லாத்தையும் தேர்ந்தெடுக்க கண்ட்ரோல் கூட A . இப்படி எல்லாத்தையும் தேர்ந்தெடுத்த பின்னே எதையாவது நீக்கணும்ன்னா கண்ட்ரோல் விசையை அழுத்திகிட்டு வேண்டாததை ஒவ்வொண்ணா
பொறுமையா சொடுக்கலாம்.


சும்மா நாலஞ்சு கோப்புகளை உருவாக்கி இதை எல்லாம் செஞ்சு பாருங்க!

கடேசியா ஒரு விஷயம் சொல்லிடறேன். வி.எ தான் பயன்படுத்தணும்ன்னு இல்லை. இலவச மாற்று மென்பொருட்கள் இன்னும் கூடுதல் வசதியோட இருக்கு. இங்கே போய் பாத்து தேவையானால் தரவிறக்கிக்கலாம். http://tinyurl.com/y8by3ex

Thursday, January 13, 2011

அடுத்து விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் ஐ பார்க்கலாம். இதை ஓரளவு முன்னே நோட்பேட் பார்த்தப்ப பார்த்தோம். இப்ப விரிவா பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்ப்லோரர்தான் கணினியோட இடைமுகம். நாம் கணினியில எங்கே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்ன்னா இதை பயன்படுத்தலாம். முன்னே சொன்ன மாதிரி...ம்ம்ம் எங்கேயாவது சொல்லி இருப்பேன்... ஒரே வேலையை பண்ண 128 வழி இருக்கலாம். ஆனா கோப்புகளையும், ஆவணங்களையும், அடைவுகளையும் அடையாளம் காண... (ஹிஹிஹி என்ன இன்னிக்கு ஒரே எதுகை மோனையாவருதே! தேர்தல்ல பேச போகலமா?) விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் சுலபமான நல்ல வழி. என்பேத்தியை அன்னிக்கு எடுத்த போட்டோ எங்கேப்பா, நான் உசிரு விட்டுகிட்டு எழுதின ப்ளாக் பக்கம் எங்கேப்பா, அருமையான அன்னிக்கு தொண்டுகிழங்களுக்கு கணினியில பாத்து சேமிச்ச அருமையான பக்கம் எங்கேப்பா ன்னு எல்லாம் தவிச்சா வி.எ- ஐத்தான் நாடணும். (வி.எ ன்னா விளக்கெண்ணை இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!) இணைய உலாவி மூலம் இணையத்தில சுத்தி வர மாதிரி இது வழியா கணினியில சுத்தி வந்து எனக்குத்தான் பழம் ன்னு சொல்லலாம்!

முன் காலத்தில தேவையான அடைவுகளை எல்லாம் நாமே அமைச்சுக்கணும். அப்புறம் எக்ஸ்பி வந்தப்ப சில முன் மாதிரி அடைவுகளை அமைச்சாங்க. ஏதாவது வேர்ட் கோப்பை எழுதி சேமிக்கப்பாத்தா அது முதல்ல மை டாகுமென்ஸ் ஐ தான் திறக்கும். படம் ஏதாவது சேமிக்கப்போனா மை பிக்சர்ஸ் திறக்கும். அதெல்லாம் முடியாது என் இஷ்டப்படித்தான் சேமிப்பேன்னா .... பிரச்சினை ஒண்ணும் கிடையாது. தாராளமா சேமிக்கலாம்.
வி.எ வைத் திறக்க:



ஆனால் நம்ம தேவைக்கு தகுந்த படி ஒழுங்கா அடைவுகளை அமைச்சு அதில கோப்புக்களை சேமிக்கறது நல்லது. தேடல் சுலபமா இருக்கும். 10-15 கோப்புகளுக்கு மேலே போகுமானா அதுக்கு தனி அடைவா உருவாக்கலாம். உதாரணமா நாம் ஒரு அடைவை உருவாக்கி அதுக்கு 'என் மாபெரும் படைப்புகள்' ன்னு பேர் இட்டு, எழுதற ப்ளாக் பக்கங்களை எல்லாம் தனித்தனி கோப்பா அதில சேமிச்சு வைக்கலாம்.



சரி அடுத்து வி.எ இடைமுகத்தை பார்க்கலாம். இதிலே வலது இடதா இரண்டு பலகம் இருக்கு. இடப்பக்கம் இருக்கிறதுல தேர்ந்தெடுத்ததை வலது பக்கம் பார்க்கலாம்....