Friday, May 25, 2012

டெக்ஸ்பெய்ண்ட்


ஹலோ ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து! இன்னிக்குன்னு பாத்து வெயில் வறுத்தெடுக்கறது. எல்லாம் முன்ன போல இருக்குமா? அந்த காலத்தில எவ்வளொ பச்சை மரங்கள், குளு குளுன்னு கடல் காத்து, சில்லுன்னு கிணத்து தண்ணி.... ஹும்! எல்லாம் மோசமா போயிடுத்து.
வாங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். அந்த காலத்த நெனச்சா அப்படித்தான் ....இந்த காலத்தோட ஒப்பிட்டு பாத்து டென்சன் ஆகிடுவோம். ரிலாக்ஸ்! எப்படிங்கிறீங்களா?
டெக்ஸ்பெய்ண்ட் ன்னு ஒரு மென்பொருள். தரவிறக்கி நிறுவிடலாம். இந்த தரவிறக்கம் நிறுவல் எல்லாம்தான் நமக்கு பழகினதாச்சே! மறந்து போயிருந்தா இங்கே போய் திருப்பி படிங்க!
ரைட் இப்ப அதை துவக்கலாம்.
ரொம்ப எளிமையான இடைமுகம்.
மேலே இடது பக்கம் டூல்ஸ். மேலே வலது பக்கம் ப்ரஷஸ்.

கீழே கலர்ஸ். இது எப்போ செயலுக்கு வர முடியுமோ அப்ப மட்டுமே காணும். மத்த நேராத்தில பாக்க முடியலைன்னா அப்போதைக்கு அதை பயன்படுத்த வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சுக்குங்க.
ரைட். டூல்ஸ் ல என்ன இருக்குன்னு முதல்ல பார்க்கலாம்.
ஒரு சேஞ்சுக்கு கீழேந்து பாத்துக்கொண்டு வரலாம். க்விட் தெரியும் - நிரலை மூடிடும். ப்ரின்ட் அச்சிட; சேவ் சேமிக்க; ஓபன் ஏற்கெனெவே போட்ட படத்தை திறக்க; எரேசர் தான் நம்ம பழைய 'ரப்பர்'. சிலேட்ல அழிக்க!
அன்டூ, ரீடூ, தெரியும்; செய்த ஒரு செயலை நீக்க, திருப்பி செய்ய....
டெக்ஸ்ட் அழுத்தினா எழுத்துக்களை டைப் செய்யலாம்.
ஹிஹிஹி பாருங்க. எவ்வளோ விஷயம் சட்டுன்னு கத்துகிட்டோம்!


ந்யூவை அழுத்தினா புதுசா ஒரு ஷீட்டை திறக்கும். இதோட பின் புல நிறத்தை தேர்ந்தெடுத்து அமைச்சுக்கலாம். அதாவது நாம ட்ராயிங் போடற ஷீட்டோட கலர். அதில எவ்வளோ சாய்ஸ் இருக்கு பாருங்க!


ரைட் முதல்ல பார்க்கிறது ப்ரஷ். வித விதமா வலது பக்கத்தில தெரியுது பாருங்க.
சின்னது பெரிசு, பட்டை அடிக்கறது, ஹேசி விளிம்பு... கீழே எந்த நிறம் வேணுமோ அதை தேர்ந்தெடுத்துக்கலாம். பூ போடலாம் கலர் கலரா... ஹிஹிஹி இங்கே ஒருபூனை, அனில்குட்டி கூட இருக்கு. அதையும் சொடுக்கி ஒரு கோடா ஷீட்ல இழுத்து பாருங்க!
கீழ் மேல் பக்கம் பாக்கிற தடிமனான அம்புக்குறியை சொடுக்க அது இன்னும் ஏராளமான படங்களை காட்டும்.கடைசியா X மாதிரி இருக்கறதையும் பரீட்சிக்காம விட வேண்டாம்!

சரி அடுத்து ஸ்டாம்ப் மேலே சொடுக்கலாம். இடது பக்கம் நிறைய மிருகங்கள் -ஆனை உள்பட- பட்சிகள் எல்லாம் இருக்கு. அப்படியே சொடுக்கி எடுத்து ஒட்ட வேண்டியதுதான். இதுல அனேகமா நிற தேர்வு செயலாகாது.
அப்புறம் நம்ம கற்பனைதான். ஒரு zooவே அமைச்சுடலாம். ஒரே மாதிரி ஒரே பக்கம் பாக்கிற கிளியா இல்லாம கீழே இருக்கிற கண்ணடியை சொடுக்க அது இட வல மாற்றம் ஆகிடும். அப்புறம் சொடுக்கற படமெல்லாம் மாறி தெரியும்! அதே போல அடுத்த பட்டன் மேல் கீழ் மாற்றத்துக்கு. இது ரெண்டும் வலது இடது அம்புக்குறி பட்டன்களுக்கு கீழே இருக்கு.
அது சரி இந்த வலது இடது அம்புக்குறி பட்டன் எதுக்கு. சொடுக்கி பாத்துட்டா போச்சு. அட இன்னொரு செட் படங்கள் வருது! ஜாலி ஜாலி! இப்படியே என்ன என்ன செட் இருக்குன்னு பாத்து முடிக்கிறதுக்குள்ளே இந்த சம்மர் போயிடும்!
ஏதாவது குட்டீஸ் கூட (ஹிஹிஹி தப்பா ஒண்ணும் சொல்லலை) சேர்ந்து இதை திறந்து இயக்கினா ரகளைதான். காக்கா மேல சொடுக்கினா அது காகா ன்னு கத்தும். ஆனை மேலெ சொடுக்க அது பிளிரும். இப்படியே தவளை, மத்த பட்சிகள்.....
அடுத்து லைன்ஸ், ஷேப்ஸ்... இதெல்லாமும் சுலபமா புரியற விஷயங்கள்தான். ஷேப்ஸ் வரையறப்ப முதல்ல கிழிக்கிற கோடு அடுத்து அப்படியே நிக்கும். ஒரு வளையம் மாதிரி தெரியும். இப்ப சொடுக்கியை நகத்தினா வரைஞ்சது சுழலும். தேவையான ஆங்கிள் கிடச்சதும் திருப்பி சொடுக்க கோடு விழுந்துடும்.


ரைட் இனிமே நான் எதுக்கு இங்கே? என்ஜாய்!