Friday, March 29, 2013

அன்ட்ராயர் - 6


key words: android, ICS, beginners, elders, howto android phone.Tamil.

ரைட், ஆன்ட்ராய்ட் சமாசாரம் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். இது பத்தி சரித்திரத்தோட எழுதிகிட்டு இருந்த பபாஷா நான்தான் எழுதறேனே ன்னு நிறுத்திட்டாரு. நான் அவர்தான் எழுதறாரேன்னு நிறுத்திட்டேன்.
அடிப்படையில் முக்கியமான விஷயங்கள் எல்லாம் பாத்தாச்சு. இப்ப ஆப்ஸ் பத்தி பார்க்கலாம். முன்னே..... ஹிஹிஹி ரொம்ப நாளாச்சு; யாருக்கு நினைவு இருக்கப்போறது? முன்னே பதிவு எழுதினப்ப ஆப்ஸ் பத்தி அப்புறம் பார்க்கலாம்ன்னு சொல்லிட்டேன்.

ஆப்ஸ் ன்னு ஒரு காலத்திலே ஆங்கிலோ இந்தியர்களை குறிப்பிட கொச்சையாக சொல்லுவாங்க. இங்கே சொல்கிறது அது இல்லே. அப்ளிகேஷன்ஸ் ஐ தான் செல்லமா குள்ளமா ஆப்ஸ் ன்னு சொல்றாங்க. திறந்த மென்பொருள் சமாசாரத்தில பெரிய உபயோகம் இதான். யார் வேணுமானாலும் ஆப்ஸ் தயார் செய்யலாம். உங்களுக்கும் அவ்வளோ துறை சார் அறிவு இருந்தா நீங்களும் செய்யலாம். இவை எல்லாம் இலவசமாகவும் கிடைக்கும். கொஞ்சம் அட்வான்ஸ்டா இருந்தா காசுக்கும் விக்கிறாங்க. சில கூடவே வர விளம்பரங்கள் மூலம் காசு சம்பாதிச்சுப்பாங்க. (இந்த விளம்பரங்கள் சில சமயம் கொஞ்சம் பலான சமாசாரமாகவும் போகலாம்; ஜாக்கிரதை!) எதானாலும் 'இது இன்னின்ன விஷயங்களை உன் போன் லேந்து தகவலா எடுத்துக்கும்; நெட் கனென்க்ட் பண்ணும்' சரியா? என்கிற ரீதியில அனுமதி கேட்டுட்டுதான் இன்ஸ்டால் ஆகும்.
அதை எல்லாம் எங்கே பிடிக்கிறது?

எல்லாம் வல்ல இறைவனுக்கு அடுத்ததா கருதப்படற கூகுளார்தான் இதையும் கொடுப்பார். மத்தவங்களும் கொடுப்பாங்கன்னாலும், நமக்கு தேவையானது இவர்கிட்டேயே கிடைக்கும். அதுவே உசிதம்.
கூகுள் ஜிமெய்ல் அக்கவுண்ட்ல லாக் இன் செய்து இருக்கிறப்ப, மேலே கிடைக்கற தேர்வுகளில ப்ளே ன்னு இருக்கும் பாருங்க. அதை தட்டினா இந்த ஆப்ஸ் இருக்கற இடத்தோட முகப்பு திறக்கும். இப்படித்தான் போகணும்ன்னு இல்லை. நேராகவும் போகலாம். மெய்ல் வழியா போகலைன்னா லாகின் செய்யணும். இதே ஐடியத்தானே நீங்க ஆன்ட்ராய்ட் போனை முதல்ல பயன்படுத்த ஆரம்பிச்சப்ப கோன்ல கொடுத்தீங்க? என்ன மறந்து போச்சா? நாலாவது பதிவிலே சொல்லியிருக்கேன் பாருங்க!

ரைட், நீங்க ஆன்ட்ராய்ட் வழியா அக்கவுண்டை கனெக்ட் பண்ணி இருந்தா உங்க போனோட ஜாதகத்தை அது அக்கவுண்ட்ல வெச்சு இருக்கும். என்ன கம்பனி, என்ன மாடல்...எல்லாம். ஏதாவது ஆப்ஸ் வேணும்ன்னு தேர்ந்தெடுத்தா அது உங்க போனுக்கு பொருந்துமா இல்லையான்னு சொல்லிடும். இல்ல உன் அன்ட்ராய்ட் ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கு; தோது படாதுன்னா அப்படி சொல்லிடும். ரைட் ன்னு விட்டுட வேண்டியதுதான். சரிப்படும்ன்னா நிறுவுன்னு சொன்னா, சரின்னு அதை போனுக்கு அனுப்பி வெச்சுடும். ஆக உங்க ஆன்ட்ராய்ட் வலை இணைப்பில இருக்கணும். இல்லைன்னாலும் பாதகமில்லை. உடனடியா கிடைக்கலைன்னா நினைவு வெச்சுகிட்டு உங்க போன் எப்ப கனென்க்ட் பண்ணுதோ அப்ப இறக்கி நிறுவிடும்.

சரி நான் வெச்சு இருக்கிற சில ஆப்ஸ் களை பார்க்கலாம். இதெல்லாம் உங்களுக்கு வேணும்ன்னு இல்லை. தேவையானதை நிறுவிக்கோங்க. மேலே போகு முன் கடேசியா ஒரு வார்த்தை. இது எல்லாம் கொஞ்சம் அளவு அதிகமான பைல்கள். அதனால விலான்ல கனெக்ட் பண்ணலாமா இல்லை போன்ல இருக்கிற சிம் கார்ட் அக்கவுண்டே பரவாயில்லையான்னு யோசிச்சு முடிவு பண்ணிக்கோங்க. சமீபத்தில கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்ததுல சிம் அக்கவுண்ட்ல பாதி கோட்டா காலி ஆயிடுத்து!



accuweather மழை இன்னிக்கு பெய்யுமா பெய்யாதா என்கிற பொய்யை அடிக்கடி தெரிஞ்சுக்க விரும்புகிறவங்க இதை நிறுவிக்கலாம். கூடவே விளம்பரங்கள் வரும்.
adobe reader பிடிஎஃப் வடிவில கதை புத்தகங்கள் நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் படிக்க ரொம்ப சௌகரியம்!
cache cleaner மெமரி கொஞ்சம் குறைவா இருந்தா நாம பாட்டுக்கு நெட்ல மேய மேய திடீர்ன்னு இடமே இல்லாம போயிட்டா? அதுக்குத்தான் இது.
barcode scanner பார் கோடை பார்த்தா அதை இலக்கு நோக்கி சுட்டுட்டா இது விவரத்தை படிச்சு சொல்லிடும்.
browser உலாவிதான் தெரியுமே! இதையே வெச்சுக்கலாம். அலல்து பயர்பாக்ஸ், க்ரோம், டால்பின் உலாவி....உங்க சாய்ஸ்தான்! தரவிறக்கி நிறுவிக்கலாம்.
calculator அஞ்சு முட்டாய் வாங்கினேன். ஒவ்வொன்னு பத்து ரூவா. மொத்தம் என்ன ஆச்சுன்னு தெரிய இப்பல்லாம் பலருக்கு இது வேண்டி இருக்கு!
camera காஆஆஆமிரா. சமீபத்தில பாத்த ஒருபடம் நினைவில நிக்குது. ஒரு காமிராமேன் தோளிலேந்து நிறைய காமிரா, லென்ஸ் எல்லாம் தொங்க விட்டுகிட்டு இருக்கார். எல்லாம் சேத்து ஆயிரக்கணக்கான டாலர் பொறும். ஆனா ஆக்ஸிடென்ட் ஆன காரை செல்போன்ல படம் பிடிச்சுகிட்டு இருக்கார்! ஏன்? கையில் உடனடியா கிடைக்கும். பையிலேந்து எடுத்து ஆன் பண்ணி.... பல சமயம் படமெடுக்க நினைக்கற விஷயம் காணாம போயிடலாம். போன்லன்னா எடுத்தோமா இலக்கு நோக்கி.... அதான்! வர வர செல்போன்களில ஆண்ட்ராய்ட் கைபேசிகளில இருக்கற காமிராவும் அட்வான்ஸ்ட் ஆ போய்கிட்டே இருக்கு. பாத்தான் சாம்சங்காரன்! பேசாம ஒரு போன்ல 3 ஜி கனெக்ஷன் உள்பட வலை இணைப்பு வசதியை கொடுத்துட்டான்!

clock பலருக்கும் உபயோகமாகிற விஷயம். நேரம் (எந்த நாட்டு நேரமும்) காட்டறதைத்தவிர அலாரம், ஸ்டாப் வாட்ச், டைமர் ன்னு வசதியும் உண்டு.
compass ம்ம்ம்ம் திடீர்ன்னு வெளியூர் போகிறோம். எந்த திசையில போறோம்ன்னேக்கூட தெரியாம போயிடலாம். புது இடத்தில எது வடக்கு, கிழக்குன்னு தெரிஞ்சுக்க உபயோகமாகும்.
contacts கூகுள் அக்கவுண்ட்ல லாக் செய்ததுமே இந்த விவரங்களை எல்லாம் போனுக்கு கொண்டு வந்துடும். சிலர் அவங்க ப்ரொபைல்ல போன் நெம்பர் போட்டு வெச்சிருந்தா அதுவும் காட்டும். அப்படி இல்லாத போது அவங்கவங்க விவரத்தை திறந்து add a field > phone number ஐ தொட்டு அதை உள்ளிடலாம். போன் நம்பரை ஒட்டி இருக்கிற கோடு மேலே தொட நம்பர்பேட் திறக்கும். அப்புறம் போன் செய்ய நம்பர் தட்டறா மாதிரி தட்ட வேண்டியதுதான். ஒண்ணுக்கு மேற்பட்ட நம்பர்களையும் சேமிச்சுக்கலாம்.
dolphin browser ஏற்கெனெவே இருக்கிற உலாவி இல்லாம வேற உலாவி இருந்தா பரவாயில்லைன்னு சொல்கிறவங்களுக்கு இது நல்லா இருக்கும். தமிழ் எழுத்துக்கள் ஒழுங்கா தெரியும். இன்னொரு விசேஷம் … உதாரணமா + மாதிரி விரலால எழுதினா கூகுள் ப்ளஸ் ஐ திறக்கணும்னு இதுக்கு பழக்கலாம்! கொஞ்சம் முன்னே பின்னே + மாதிரி இருந்தாலும் அது புரிஞ்சுகிட்டு திறக்கும்!
draw குட்டீஸ்க்கு ரொம்ப பிடிச்சது இது. நோட் புக் பென்சில்லால எழுத முரண்டு செய்கிற குழந்தைகள் இதுல எழுத உற்சாகம் காட்டுவாங்க. கோட்டோட்ட தடிமன், நிறம் எல்லாத்தையும் பிடிச்சபடி அமைச்சுக்கலாம்.
email
file explorer கணினில இருக்கிறது போலவேதான். இடைமுகம் கொஞ்சம் வித்தியாசமாக.
Flashlight இந்த பவர் கட் இருக்கிற நாட்களுக்கு ரொம்பவே பயன்படும். எப்பவும் திரையில இது தெரியறா மாதிரி வெச்சுக்கறது நல்லது. காமிராவுக்கு இருக்கிற எல்ஈடி விளக்கை பயன்படுத்தி இது வேலை செய்யுது. வெறும் விளக்கா மட்டும் இல்லாம போலீஸ் லைட், எஸ்ஓஎஸ் லைட் ஸ்ட்ரோப் ன்னு பல மாற்று விநியோகமும் உண்டு.
FM radio
Gallery இதான் படங்களை ஒழுங்கு படுத்தி பார்க்க உதவுகிற மென்பொருள்.
Gmail
google
ஹிஹிஹி... இதெல்லாம் என்னன்னு சொல்ல வேண்டாம், இல்லையா?
அடுத்த பக்கம் அப்புறம் பார்க்கலாம்.

2 comments:

  1. பயனுள்ள அண்ட்ராயர் பதிவுகளுக்கு ரொம்ப நன்றி திவாஜி. அஞ்சாவது பதிவை எங்கே காணோம். காக்கா ஊஷ் ஆயிடுத்தா.????

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!