Monday, December 5, 2016

யூஎஸ்எஸ்டி (USSD) *99# வங்கி பண பரிமாற்றம்


யூஎஸ்எஸ்டி (USSD) *99# வங்கி பண பரிமாற்றம் : நிலுவை காணலும் இண்டர்நெட் இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்தலும்

சமீபத்திய ரூபாய் செல்லுபடி கட்டுப்பாடு மக்களுக்கு பல பிரச்சினைகளை தந்துள்ளது. நமக்குப்பிடிக்கிறதோ இல்லையோ அது அமுலுக்கு வந்தாயிற்று. வெறுமனே புலம்பிக்கொண்டு இல்லாமல் இதை சமாளித்து மேலே செல்வதெப்படி என்று பார்ப்பதே புத்திசாலித்தனமாகும்.
தகவல்கள் இங்கிருந்து பெறப்பட்டன. http://upipayments.co.in

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யூஎஸ்எஸ்டி (USSD) அடிப்படையிலான அலைபேசி பறிமாற்றம். இண்டர்நெட் இணைப்பு இல்லாமலே சாதாரண அலைபேசியில் கூட இந்த முறையில் பண பரிவர்த்தனை செய்யலாம் என்பதால் இதை முதலில் பதிவிடுகிறேன்.
அனேகமாக எல்லா வங்கிகளும் இந்த முறையில் பண பரிமாற்றம் செய்ய அனுமதிக்கின்றன. எனவே உங்கள் வங்கி இதை அனுமதிக்கிறதா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஆதரிக்கும் சில வங்கிகள்: ஸ்டேட் பேங்க், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி. பிஎன்பி (PNB), ஆக்சிஸ், பிஓபி(BOB)

யூஎஸ்எஸ்டி (USSD) என்றால் என்ன?

நாம் நம் அலைபேசி கணக்கில் இன்னும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரு முறையை பயன்படுத்துகிறோம் இல்லையா? அதே போலத்தான். அல்லது அலைபேசியை கடைக்காரரிடம் கொடுத்தால் அதில் சார்ஜ் செய்ய சில எண்களை அழுத்துவார். அதுவும் இதே முறைதான். நாமோ இவரோ அழுத்தும் இந்த சில எண்கள்தான் யூஎஸ்எஸ்டி (USSD) குறியீடு. இவை பிஎஸ் என்எல் ஏர்டெல் போன்ற உங்கள் டெலிகாம் கம்பனியின் சர்வருடன் தொடர்பு கொள்கின்றன. இந்த டயல் செய்யும் எண்கள் எப்போது ‘*’ (asterisk) உடன் ஆரம்பித்து # (hash) உடன் முடிகின்றன.
யூஎஸ்எஸ்டி (USSD) குறியீடு டெலிகாம் கம்பனியின் சர்வருடன் தொடர்பு கொள்வது போலவே வங்கியின் சர்வருடனும் கூட தொடர்பு கொள்ள முடியும். இதனால் உங்கள் வங்கி கணக்கின் தகவல்களை பெற முடியும். சில பரிமாற்றங்களையும் செய்ய முடியும். இப்படி கணக்கில் நுழைய உங்கள் அலைபேசி எண் வங்கியின் விவரங்களில் பதிவாகி இருக்க வேண்டும். இரட்டை சிம் வைத்திருக்கிறவர்கள் இங்கே கவனிக்க வேண்டும். எந்த எண் பதிவாகி இருக்கிறதோ அந்த எண்ணில் இருந்துதான் நீங்கள் யூஎஸ்எஸ்டி (USSD) குறியீட்டை டயல் செய்ய வேண்டும். அந்த எண் நீங்கள் டயல் செய்து பேசும் நிலையில் இருக்க வேண்டும். இந்த சேவைக்கு ஒரு சிறு தொகை வசூலிக்கப்படும்.

டெலிகாம் ஆபரேட்டர் சர்வரில் இருந்து எப்படி வங்கி சர்வருக்கு தகவல் போகிறது என்ற தலைவலி எல்லாம் நமக்கு வேண்டாம். இந்த யூஎஸ்எஸ்டி (USSD) சேவையை என்பிசிஐ (NPCI) என்ற தேசிய நிறுவனம் பார்த்துக்கொள்ளுகிறது. இந்த சேவையை பெற நாம் டயல் செய்ய வேண்டிய எண் *99# . எந்த வங்கியானாலும் இதே எண்தான். மாற்றமில்லை. இந்த சேவைக்கு நுப் (NUUP) என்று பெயர்.

NUUP வழி சேவைகள் :

NUUP யூஎஸ்எஸ்டி (USSD) வழியாக நம் வங்கி கணக்கில் இருக்கும் தொகையை பார்க்கலாம். சிறிய அளவில் சமீபத்திய பரிமாற்றங்களை பார்க்கலாம். எம் எம்ஐடி ஐ காட்டச்சொல்லலாம். ஓடிபி தயார் செய்து அனுப்பச்சொல்லலாம். எம்பின் மாற்றலாம். இதெல்லாம் என்ன என்று பார்க்க இருக்கிறோம்.

NUUP பிற மொழிகளில்:

ஆங்கிலம், ஹிந்தி தவிர்த்து மேலும் பத்து இந்திய மொழிகளில் நாம் இதை பயன்படுத்த முடியும். அவற்றுக் ஏற்ப குறியீடும் மாறும். பட்டியலை காண்க.
  1. ஆங்கிலம் *99#
  2. ஹிந்தி *99*22#
  3. தமிழ் *99*23#
  4. தெலுங்கு *99*24#
  5. மலையாளம் *99*25#
  6. கன்னடம் *99*26#
  7. குஜராத்தி *99*27#
  8. மராத்தி *99*28#
  9. பங்காலி *99*29#
  10. பஞ்சாபி *99*30#
  11. அஸ்ஸாமி *99*31#
  12. ஒரியா *99*32#
இன்னும் முழுக்க வளராத்தால் இப்போதைக்கு மூன்று விஷயங்களை மட்டுமே இந்த மொழிகளில் செய்ய முடியும்.
  • நிலுவை பார்த்தல்
  • சிற்றறிக்கை
  • ஐஎஃப் எஸ்சி(IFSC) வங்கி கணக்கு எண் கொண்டு பண பரிமாற்றம்.
சரி இப்போது எப்படி பண பரி மாற்றம் செய்வது என்று படிகளை பார்க்கலாம்.
முதலில் உங்கள் அலைபேசி எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இன்னும் செய்யவில்லை எனில் வங்கிக்கு சென்று இதை செய்ய வேண்டும், முன்னேயே செய்து இருந்தால் அடுத்த படிக்கு போகலாம்.
1. வங்கி கணக்குடன் இணைத்திருக்கும் நம்பரில் இருந்து *99# டயல் செய்யுங்கள். 3-5 வினாடிகள் காத்திருக்கவும்.
2: இப்போது கொஞ்சமே கொஞ்சம் விவரம் உள்ளிட வேண்டும்.
எல்லா வங்கிகளுக்கும் ஒரு சுருக்கிய மூன்றெழுத்து குறியீடு உண்டு. இதை உள்ளிடலாம்.
அல்லது
ஐஎஃப் எஸ்சி(IFSC) கோடின் முதல் நான்கு எழுத்துக்கள்.
அல்லது
வங்கியின் முதல் இரண்டு வங்கி குறியீட்டு எண்.
இதில் ஏதேனும் ஒன்று மட்டும் போதும்.
பச்சை பட்டனை அழுத்தவும்,
3: இப்போதுசேவைகளோட தேர்வு கிடைக்கும். இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். உங்கள் வங்கிக்கான சேவையில் தேர்வுகளை கொஞ்சம் பார்த்து உள் வாங்கிக்கொள்ளுங்கள்.
  1. நிலுவை
  2. சிற்றறிக்கை (Mini statement)
  3. எம்எம்ஐடி (MMID) வழியாக பண பரிமாற்றம்.
  4. ஐஎஃப் எஸ்சி(IFSC) வழியாக பண பரிமாற்றம்.
  5. ஆதார் எண்ணை பயன்படுத்தி பண பரிமாற்றம்.
  6. எம்எம்ஐடி பார்த்தல்
  7. எம்பின் (M-PIN ) மாற்றுதல்
  8. ஓடிபி (OTP ) பெறுதல்
எண் 1 ஐ அழுத்தி அனுப்பினால் நிலுவையை தெரிந்து கொள்ளலாம்.
எண் 2 ஐ அழுத்தி அனுப்பினால் சிற்றறிக்கை (Mini statement) ஐ பார்க்கலாம்.
எண் 3 ஐ அழுத்தி அனுப்பினால் எம்எம்ஐடி (MMID) வழியாக பண பரிமாற்றம்இந்த எம்எம்ஐடி - MMID (Mobile Money Identifier) என்பது என்ன?நீங்க வங்கியில் அலைபேசிமூலம் பண பரிமாற்றம் செய்ய பதிவு செய்யும் போது அவர்கள் ஒரு எண்ணைத்தருவார்கள். இதுவே அது.இந்த பரிமாற்றங்களை செய்ய 3 ஐ அழுத்தி அனுப்பவும். அடுத்து கிடைக்கும் திரையில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது அலைபேசி எண், எம்எம்ஐடி, எவ்வளவு பணம் என்ற தகவல், மேலும் எதற்காக பணம் கொடுத்தோம் என்று நினைவு வைத்துக்கொள்ள நம் வசதிக்காக குறிப்புகள்.இதை அனுப்பியதும் அடுத்த திரை வருகிறது. நமது எம்பின் மற்றும் தேவையானால் நம் கணக்கின் கடைசி 4 எண்கள் இவற்றை உள்ளிட வேண்டும்.
பரிவர்த்தனை முடிந்ததாக உறுதி செய்து செய்தி வரும்.


இதே போல 4 ஐ அழுத்தி அனுப்ப ஐஎஃப் எஸ்சி(IFSC) வழியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

இது எதுக்கு? மேலே பார்த்த வழியில் பணம் பெறுபவர் தம் வங்கி கணக்கில் அலைபேசி பரிவர்த்தனைக்கு பதிவு செய்து எம்எம்ஐடி வைத்திருக்க வேண்டி இருக்கிறது. அவரிடம் அது இல்லை, ஆனால் வங்கிக்கணக்கு இருக்கிறது.
4 ஐ அழுத்தி அனுப்பவும். அடுத்து கிடைக்கும் திரையில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது வங்கி கணக்கு எண், ஐஎஃப் எஸ்சி(IFSC), எவ்வளவு பணம் என்ற தகவல், மேலும் எதற்காக பணம் கொடுத்தோம் என்று நினைவு வைத்துக்கொள்ள நம் வசதிக்காக குறிப்புகள்.
இதை அனுப்பியதும் அடுத்த திரை வருகிறது. நமது எம்பின் மற்றும் தேவையானால் நம் கணக்கின் கடைசி 4 எண்கள் இவற்றை உள்ளிட வேண்டும்.
பரிவர்த்தனை முடிந்ததாக உறுதி செய்து செய்தி வரும்.

இதே போல 5 ஐ அழுத்தி அனுப்ப ஆதார் எண்ணை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யலாம். இதற்கு பணம் பெறுபவர் அவரது வங்கிக்கணக்குடன் அவரது ஆதார் எண்ணை இணைத்து இருக்க வேண்டும்.

5 ஐ அழுத்தி அனுப்பவும். அடுத்து கிடைக்கும் திரையில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது ஆதார் எண், எவ்வளவு பணம் என்ற தகவல், மேலும் எதற்காக பணம் கொடுத்தோம் என்று நினைவு வைத்துக்கொள்ள நம் வசதிக்காக குறிப்புகள்.
இதை அனுப்பியதும் அடுத்த திரை வருகிறது. நமது எம்பின் மற்றும் தேவையானால் நம் கணக்கின் கடைசி 4 எண்கள் இவற்றை உள்ளிட வேண்டும்.
பரிவர்த்தனை முடிந்ததாக உறுதி செய்து செய்தி வரும்.

சில வங்கிகள் பாதுகாப்புக்காக கூடுதல் தகவல்களை கேட்கலாம்.

எம்எம்ஐடி பார்த்தல்: யாரேனும் நமக்கு பணம் அனுப்ப நமது எம்எம்ஐடி ஐ கேட்கிறார்கள். நினைவில் இல்லை என்றால் 6 ஐ அழுத்தி அனுப்ப அதை பார்க்கலாம்.

எம்பின் (M-PIN ) மாற்றுதல்: ஈமெய்ல்லில் பாஸ்வேர்ட் மாதிரி பாதுகாப்புக்காக இங்கே செயல் படுவது நமது எம்பின் (M-PIN ) இல்லையா? இது மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால் என்ன செய்வது? மாற்றிவிடலாம்.
பாதுகாப்பு கருதி நாம் நமது எம்பின் (M-PIN ) ஐ மாற்ற நினத்தால் 7 ஐ அழுத்தி அனுப்ப தோன்றும் திரையில் நமது பழைய பின், அடுத்து புதிய பின், மீண்டும் புதிய பின் ஆகியவற்றை உள்ளிட்டு அனுப்ப வேண்டும். உறுதி செய்து செய்தி வரும்.

மக்கு வங்கி கணக்குக்கு ஓடிபி (OTP ) தேவையானால் 8 ஐ அழுத்தி அனுப்பி பெறலாம்.
சரி, இப்போது பணம் அனுப்ப என்ன செலவு?
ட்ராய் சொல்வது ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ஒன்னரை ரூபாய், அலைபேசி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடலாம். கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். அதிகப்படியாக 5000 ரூபாய் வரை இந்த முறையில் பரிவர்த்தனை செய்யலாம்.

குறிப்புகள்:
தேவையானது:  நமக்கு ஒரு வங்கி கணக்கு. உங்கள் அலைபேசி இந்த பரிவர்த்தனைக்குப் பதிவாகி இருக்க வேண்டும்; நம்முடைய எம்பின் நினைவிருக்க வேண்டும்பணம் பெறுபவருக்கு ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும். பணம் பெறுபவரது எம்எம்ஐடி, ஐஎஃப் எஸ்சி(IFSC) , ஆதார் எண் இவற்றில் ஒன்று தெரிய வேண்டும்.
பணம் பெறுபவரும் அலைபேசி பரிவர்த்தனைக்கு வங்கியில் பதிவு செய்திருந்தால் எம்எம்ஐடி நல்லது. இல்லையானால் ஐஎஃப்எஸ்சி, ஆதார் வழி. எப்படியும் அவருக்கும் ஒரு வங்கி கணக்கு அவசியம்.

ஸ்மார்ட் ஃபோன் வைத்திருந்தால் யூபிஐ இன்னும் எளிது. அது அடுத்த பதிவில்.

No comments:

Post a Comment

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!