Monday, December 20, 2010

வெள்ளம்!

தரவிறக்கத்துல இன்னொரு வகையை பாத்துட்டு மேலே போகலாம்.
ஒரு பெரிய கோப்பு இருக்குன்னு வெச்சுக்குங்க. ம்ம்ம்ம்ம் ஆன்மீகம் பார் டம்மீஸ் புத்தகமா.... ம்ம்ம்ம் ... அது ஒண்ணும் பெரிய கோப்பா இராது...சரி சரி உபுண்டு வட்டு பிம்பம் ன்னு வெச்சுக்கலாம். அது எப்பவும் ஒரு குறுந்தட்டு - சிடி  - அளவு - 700 எம்பி இருக்கும். உலகத்திலே 12 மில்லியன் - 1.2 கோடி உபுண்டு பயனர்கள் இருக்காங்களாம். (செக்யூரிடி அப்டேட் எவ்வளோ பேர் தரவு இறக்கறாங்கன்னு பாத்து கண்டு பிடிக்கறாங்களாம்). இவ்வளோ பெரிய கோப்பை ஒரு சேவையகத்திலேந்து (server) இறக்கலாம். ஆனா கஷ்டமா இருக்குமில்லையா? அதனால் நாட்டுக்கு நாடு சேவையகம் வெச்சு இருக்காங்க. இருந்தாலும் 1.2 கோடி ரொம்ப பெரிய நம்பர்.
பின்னே இவ்வளோ பேருக்கு எப்படி வசதி செய்யறது? ஒவ்வொரு ஏப்ரல் மாசமும் அக்டோபர் மாசமும் புதுசா ரிலீஸ் செய்வாங்க. அப்ப தரவிறக்க முழி பிதுங்கிடும் இல்லையா?
இந்த மாதிரி பிரச்சினைக்கு ஒரு வழி கண்டு பிடிச்சு இருக்காங்க. அதன் மூலம் எவ்வளோ பேர் வேணுமானா குறைந்த நேரத்திலே ஒரே சமயம் தரவிறக்கிக்க முடியும். அதுக்கு டாரண்ட் ன்னு பேர். அதை டாரண்ட் ன்னுதான் சொல்லணும்; வெள்ளம்ன்னு சொல்லக்கூடாது!
அது எப்படி வேலை செய்யுதுன்னு பாக்கலாமா?
ம்ம்ம்ம்ம் ஒரு 100 எம்பி கோப்பு இருக்குன்னு வைச்சுக்கலாம். அதை 256KiB துண்டுகளா வெட்டறேன்.  ஒரு எம்பி க்கு (MB.  MP MLA இல்லை!) 4 துண்டு ஆச்சு. அப்ப 100 எம்பி 400 துண்டாச்சு. இப்ப என்ன செய்யறேன், முதல்ல தரவிறக்க வர ஆசாமிக்கு முதல் துண்டை கொடுக்கறேன். அதுக்குள்ள இரண்டாம் ஆசாமி வரார். அவருக்கு முதல் துண்டை தர மாட்டேன். இரண்டாம் துண்டை தருவேன்! மூணாவது ஆசாமிக்கு மூணாவது துண்டு. முதல் ஆசாமி எனக்கு மத்த துண்டுகள் வேணும்ன்னு கேட்டா, ரெண்டாம் துண்டு ரெண்டாம் ஆசாமிகிட்டே, மூணாவது துண்டு மூணாவது ஆசாமிகிட்டே வாங்கிக்குங்கன்னு சொல்லுவேன். அவரும் வாங்கிப்பார். பதிலுக்கு அவங்ககிட்ட இல்லாத முதல் துண்டை தருவார். ரெண்டாம் ஆசாமி ரெண்டாம் துண்டை மத்தவங்களுக்கு கொடுத்துட்டு முதல் மூணாவது துண்டை வாங்கிப்பார். இதே போல மூணாவது ஆசாமி. இப்ப மூணே தரம் நான் துண்டு கொடுத்ததுல மூணு பேருக்கும் மூணும் கிடைச்சாச்சு.
இப்படி சேவையகத்துக்கு வேண்டுதல் வர வர அடுத்த அடுத்த துண்டுதான் கொடுக்கப்படும். 400 பேருக்கு 400 துண்டு கொடுத்த பிறகே திருப்பி முதல் துண்டு கொடுக்கப்படும். துண்டுகளை வாங்கினவங்க அவங்களுக்குள்ள பரிமாற்றம் பண்ணிப்பாங்க.  இதே போல எத்தனை துண்டுகள் வேணுமானலும் பரிவர்தனை செஞ்சுக்கலாம்! டாரண்டுக்கான மென்பொருள் இந்த துண்டுகளை எல்லாம் ஒண்ணா சேத்து முழு கோப்பா ஆக்கிடும்!
அது சரி என்ன துண்டு யாருகிட்டே இருக்குன்னு எப்படி தெரியும்?
அதுக்குத்தான் சேவையக வேலை வேணும். ட்ராக்கர் ன்னு இதுக்கு பேரு. நம்மகிட்ட இருக்கிற துண்டுகள் என்ன என்ன மத்தவங்ககிட்ட இருக்கறது என்ன என்னன்னு இது கணக்கு வெச்சுகிட்டே இருக்கும். இன்னார் இன்னார்கிட்ட வாங்கிக்குங்க ன்னு தகவல் கொடுத்துகிட்டே இருக்கும். கோப்போட துண்டுகள் பரவலா இருக்கிறதால் சேவையக பளு இல்லாம ஒத்தர் கணினியிலேந்து ஒத்தர் கணினிக்கு நேரடியா கோப்பு துண்டுகளை பரிமாறிக்கலாம். இதானால் நம்மோட இணைப்பை பொருத்து வெகு சீக்கிரம் கோப்பு மொத்தமும் கிடைச்சுடும்!
மேலே தகவல் அடுத்த பதிவுல.

2 comments:

  1. வெள்ளம்ன்னு சொல்லக்கூடாது!//

    கடலூர் வெள்ளத்தைப் பத்திச் சொல்றீங்களோனு நினைச்சுட்டேன்! :P

    எனக்குப் பிச்ச துண்டெல்லாம் வேண்டாம், பிய்க்காத ஒரே நீளத் துண்டுதான் வேணும்னு சொன்னா??:)))))))))

    ReplyDelete
  2. கடலூர் வெள்ளாமா? ஹாஹாஹா!
    பிக்காத துண்டு வேணும்ன்னா அது அறுந்து போக வாய்ப்பு இருக்கு. அப்புறம் முழுக்க திருப்பி தரவிறக்கணும்.

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!